Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் ஆணையம் பிரதமர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்கிறது - செல்வப்பெருந்தகை!

தேர்தல் ஆணையம் பிரதமர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்கிறது – செல்வப்பெருந்தகை!

-

தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை தான் செய்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை! குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது இந்தியாவில் உள்ள 50 கோடி பணியாளர்களில் 91 சதவீதம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் பணியாற்றும் மாநிலங்களை பொறுத்து தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.176 மட்டுமே கிடைக்கிறது. ஆகையால் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கும் ஒரு நாளுக்கு குறைந்த ஊதியமாக ரூ.400 வழங்குவோம். தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியது வேடிக்கையாக உள்ளது.

மதிமுக வேட்பாளர்களுக்கு பம்பர சின்னமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னமும் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை தான் செய்கிறது. மாநிலக் கட்சிகளை அழிக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்ற மோடியின் சிந்தனையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக தேர்தல் ஆணையம் பார்க்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ஜனதா தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படிப்பட்ட கட்சியோடு பாமக கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலம் சமூக நீதிக்கு எதிராக பாமக செயல்பட்டு வருகிறது. என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

MUST READ