
தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க எஸ்ஐடி-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மதியழகனை கைது செய்த தனிப்படை போலீஸார், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரையும் கைது செய்தனர். இருவரும் கடந்த 30ம் தேதி கரூர் குற்றவியல் மஜிஸ்திரேட் நீதிமன்றம் 1ல் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியிருக்கும் சிறப்பு புலனாய்வு போலீஸார் , மதியழகனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்காக 5 நாட்கள் கோரப்பட்ட நிலையில் , 2 நாட்கள் மட்டும் விசாரிக்க எஸ்.ஐ.டிக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை அடுத்து கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகனை உடனடியாக காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.