Homeசெய்திகள்தமிழ்நாடுசிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்...

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

-

- Advertisement -

சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் வி.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். எனவே, சிறு வியாபாரிகளுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கவும், விலை உயர்வைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி கிடைக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்டிட அனுமதி பெற காத்திருப்போருக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை ஒருமுறை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உதகை மற்றும் குன்னூர் நகராட்சி சந்தை வளாகங்களின் கட்டுமானப் பணிகளை வியாபாரிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நீலகிரியில் தற்போது 7 மீட்டர் உயரம் வரை மட்டுமே கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பிற மலை மாவட்டங்களில் உள்ளதைப் போல 10 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

கூடலூர் – மைசூர் இடையே ரயில் சேவையை தொடங்கும் நோக்கில் கூடலூரில் இருந்து நஞ்சன்கூடு வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தி வருவதாக கூறிய விக்கிரமராஜா, குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு சிறு வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஏராளமான சிறு கடைகள் செயல்பாடுகளை குறைத்தோ அல்லது மூடியோ உள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அரசு ரூ.25 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். டீசல் விலை அதிகரித்துள்ளதால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்துள்ளதாகவும், இதன் தாக்கமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே மத்திய அரசு டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், கொரோனா காலத்தில் இருந்தது போல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண விலக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கல்லட்டி மலைப்பாதையில் மீண்டும் வாகன போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், சில பகுதிகளில் ஆளுங்கட்சியினரால் மாமூல் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருவதாகக் கூறினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், முழுமையான ஆரம்ப விசாரணைக்கு பிறகே வழக்குப் பதிவு செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“திமுக அரசு கைவிட்ட முடிவை தவெக அரசு மீண்டும் அமல்படுத்துகிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

MUST READ