ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில், தற்போதைய அரசை விமர்சித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்ற அரசின் விளக்கம் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பச்சை நிற கிரீன் மேஜிக் பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்த ஆவின் நிர்வாகம், எந்த வகை பாலும் நிறுத்தப்படவில்லை என்றும், நுகர்வோர் தேவைக்கேற்ப அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தது. இதே கருத்தை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது சமூக வலைதள பதிவில் அண்ணாமலை, சென்னை மாநகரில் தினசரி விற்பனையாகும் ஆவின் பாலில் பெரும்பகுதியை கிரீன் மேஜிக் பால் வகை பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வகை பால் தற்போது பல விற்பனை மையங்களில் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றும், அதன் விற்பனை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“விற்பனை குறைக்கப்படவில்லை என அரசு கூறுகிறது. அப்படியானால் முன்புபோல் அனைத்து ஆவின் மையங்களிலும் கிரீன் மேஜிக் பால் ஏன் கிடைப்பதில்லை? அதன் விற்பனை குறைந்திருப்பதை பொதுமக்களே உணர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசின் விளக்கம் மக்களை குழப்பும் முயற்சியாகவே தெரிகிறது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அதிக கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு பதிலாக குறைந்த கொழுப்பு சத்துள்ள மற்றொரு வகை பாலை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.
தற்போதைய அரசும் அதேபோன்ற அணுகுமுறையை பின்பற்றுவதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, இது மக்களின் விருப்பத்திற்கு எதிரான நடவடிக்கை என தெரிவித்தார். ஆவின் நிறுவனத்தின் நிதி சிக்கல்களை காரணம் காட்டி மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகையின் விற்பனையை குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். நிதி இழப்பை சமாளிக்க பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், கிரீன் மேஜிக் பால் விநியோகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்” – கனிமொழி அட்வைஸ்
