அதிமுகவினர் அவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். விஷ சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தப்பிறகு பேசலாம் எனக் கூறியும் அதிமுகவினர் கேட்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையின் மாண்புக்கு குந்தகம் ஏற்படுத்தியதால், அவர்களை வெளியே அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விதிகளுக்கு புறம்பாக பேரவைக்குள் பதாகைகளை எல்லாம் கொண்டுவந்து அமளி செய்ததாக அதிமுகவினர் மீது சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.