Homeசெய்திகள்தமிழ்நாடுநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு - உதயநிதி...

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

-

- Advertisement -

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், மாநிலம் கடனில் தத்தளிப்பதாகவும் தற்போதைய முதலமைச்சர் தொடர்ந்து பேசி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

we-r-hiring

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதும், நாட்டில் பணிபுரியும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் உள்ளிட்ட சாதனைகள் தற்போதைய அரசின் ஒரு மாத கால ஆட்சியில் ஏற்பட்டதா அல்லது கடந்த ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் பலன்களா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும் தான் உலகமா?’ என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், தற்போது நீட் விலக்கு கோரி பேசுவதன் மூலம் தனது முந்தைய நிலைப்பாட்டுக்கு முரணாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், டெல்லி பயணத்தின் போது நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள தனது கூட்டணிக் கட்சியிடமோ மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இறுதியாக, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகள் அனைத்தும் முந்தைய திராவிட மாடல் அரசின் முயற்சிகளின் பலன்கள் என்றும், அந்த சாதனைகளின் மீது தற்போதைய அரசு முழுமையாக ‘ஸ்டிக்கர்’ ஒட்டியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் அவதூறுகள் மூலம் பெற்ற வெற்றி நீண்ட நாள் நிலைக்காது என்றும், இறுதியில் உண்மையே வெற்றி பெறும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

MUST READ