இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதாவின் கடிதத்தை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில், எளிய நிலையில் உள்ள தமிழக மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்படுவது, அவர்களின் சொத்துகள் அநியாயமாக பறிமுதல் செய்யப்படுவது, பெரும் அபராதம் விதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்வது கடுமையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.