`சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை அதிகம் எடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறதென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் பசுமைப் பயணம் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நிறைவு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இயற்கையாக நாம் சுவாசிக்கும் காற்றானது மரங்கள் மூலம் கிடைப்பதாகவும் அந்த மரங்களினால் கிடைக்கும் ஆக்சிஜன் நம் உயிரை பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டார். கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், ஆக்சிஜனை வழங்கும் மரங்களையும் இயற்கையையும் பாதுகாப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதாகவும் ஆனால், தமிழ்நாட்டை பொருத்தவரை நாம் பாதுகாப்பான இடத்தில் வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் இளைஞர்கள் குழந்தைகள் விழிப்புணர்வூட்டும் நோக்கோடு மிகவும் அக்கறையாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவ செல்வங்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துகளை கூறுவதாகவும் உதயநிதி பேசினார்.
வரும் காலங்களில் நம் தலைமுறை இயற்கையை பாதுகாக்கும் விஷயத்தில் அலார்ட்டாக இருப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். உலகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தும் பிரச்சனையாக சுற்றுச்சூழல் இருந்து வருகிறது என சுட்டிக்காட்டிய துணை முதல்வர், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய புகையினால் சுற்றுச்சூழல் மாசடைவதையும் சுட்டிக்காட்டினார்.
இன்றைக்கு, அதிகமாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கி இருப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று அவர் தெரிவித்தார். சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய மின்சக்தி மற்றும் விண்ட் எனர்ஜி எனப்படும் காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை அதிகம் எடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறதென்று உதயநிதி பெருமிதம் தெரிவித்தார்.
நமக்கு பசுமையான சூழல் வேண்டுமா? அல்லது வறட்சியான சூழல் வேண்டுமா? என்பதை நம் ஒவ்வொருவரின் செயல்பாடு முடிவு செய்யும் என்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி கேட்டுக் கொண்டார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவை விழிப்புணர்வு பிரசாரமாக மேற்கொள்ளப்பட்ட மாணவர்களின் இந்த மிதிவண்டி விழிப்புணர்வு பசுமை பயணமானது, நவம்பர் 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, நவம்பர் 20-ல், சென்னை மெரினா கடற்கரையில் நிறைவு பெற்றுள்ளது.
தமிழக துறவியர் பேரவை மற்றும் அய்-கப் இயக்கத்தின் சார்பில், சுமார் 1000 கிலோமீட்டர் அளவுக்கு நடைபெற்ற பசுமை பயணத்தில், 10 மாணவர்களும் 2 மாணவிகளும் பங்கேற்றது, குறிப்பிடதக்கது.
சிறுபான்மையினரின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட முதல்வர் – நன்றி தெரிவித்த பிரசிடெண்ட்


