ஒவ்வொரு ஆண்டும் 9,58,000 கர்ப்பிணி பெண்களுக்கும் 8,76,000 குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99% தொடர்ந்து நிறைவேற்றி மகத்தான சாதனை செய்து வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்ககம் சார்பில் 2025-26 ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்பின்படி நகர்ப்புற சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். குழந்தைகள் பிறந்ததிலிருந்து 16 வயது வரை போடவேண்டிய அனைத்து வகையான தடுப்பூசிகள் போடுவதற்கு அதன் சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்,
”மக்கள் நல்வாழ்வுத்துறையில் ஆண்டுதோறும் அறிவிக்கும் அறிவிப்புகளை அந்த ஆண்டே செயல்படுத்தி புத்தக வடிவில் அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்து வருகிறோம். நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் 708 இடங்களில் அமையும் என்று முதல்வர் கூறியுள்ளாா். அதன்படி 500க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட்டு விட்டது மீதமுள்ள 208 இடங்கள் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள தாய்மார்களுக்கு உதவியாக இருக்கும். 1978 இல் விரிவுபடுத்தப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டது. தடுப்பூசி திட்டத்தின் 11 வகையான தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு போடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 9,58,000 கர்ப்பிணி பெண்களுக்கும் 8,76,000 குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99% தொடர்ந்து நிறைவேற்றி மகத்தான சாதனை செய்து வருகிறது. இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஏறத்தாழ 1.2 மில்லியன் அளவிற்கு நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள்.
500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் இந்த திட்டம் இங்கிருந்து தொடங்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் புதிதாக தொடங்க உள்ள நகர்ப்புற வாழ்விட மையங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தேசிய தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, இது ஒரு சாதாரண நிகழ்வு, தமிழ்நாட்டில் மட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பெரிய பிம்பம் ஏற்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை போன்றவர் அறிக்கை விட்டுள்ளார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நோட்டீஸ் அனுப்புவார்கள் அதை சரி செய்து நாங்கள் பதில் அனுப்புவோம் அது சரியாகிடும். ஏதோ இப்போது நடப்பதாக பெரிய தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். அதிமுக ஆட்சியிலும் எல்லா மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஆண்டு தோறும் இந்த நோட்டீஸ் வரும். என் எம் சி நிர்வாகம் டெல்லியில் இருந்து சம்பளம் தொடர்பாக, வருகை தொடர்பாக பயோமெட்ரிக் இருக்க வேண்டும், மருத்துவர்கள் வருவது போவது இரண்டையும் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். மருத்துவர்கள் வருகை மட்டுமே பதிவு செய்து வருகிறார்கள்.
எவ்வளவு நேரம் மருத்துவர்கள் பணி செய்கிறார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுக்கிறது. இதில் பல்வேறு மருத்துவ சங்கங்களுக்கும் முரண்பட்ட கருத்து உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம் துறை செயலாளர் சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு வருகை மற்றும் புறப்படுதல் உள்ளிட்ட இரண்டு செயல்முறைகளுக்கும் பயோமெட்ரிக் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறார்கள். 415 காலி பணியிடங்கள் மருத்துவ கல்லூரிகளில் இருந்தது. கடந்த மாதம் 328 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. நேற்று மீதமுள்ள 87 இடங்களும் நிரப்பப்பட்டன. எல்லாம் மருத்துவ கல்லூரிகளிலும் காலி பணியிடங்கள் என்பது கிடையாது.
எப்போதும் நிகழ்கால நிகழ்வுகளை எடப்பாடி பழனிச்சாமி சொல்வதில்லை முடிந்து போன விஷயத்தை மட்டும் தான் சொல்வார் அது அவருக்கு பழகிப்போன விஷயம் அவருக்கு அறிக்கை எழுதிக் கொடுத்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதோ நடக்கிறது என்ற பதட்டத்தை அரசுக்கும் மருத்துவர்களுக்கும் உருவாக்குகிறார்கள் உடனடியாக கருத்து சொன்னதற்கு நன்றி.
2023 இல் என் எம் சி மருத்துவ கல்லூரியில் ஒவ்வொரு துறைக்கும் தேவைப்படும் ஆசிரியர்கள் குறித்து திருத்திய அறிவிப்பை வெளியிட்டது உண்மை. அதைவிட கூடுதலான மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம் 18000 தருவது இதில் மத்திய அரசு 3 ஆயிரம் மட்டும் தான் கொடுக்கிறது. பயனாளர் பட்டியலை அவர்கள் தான் வெளியிட வேண்டும் அதற்கு பிறகு தான் நாம் கொடுக்க முடியும். இது கொடுமையான விஷயம் மாநில அரசு பதினைந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறது. அந்த போர்டல் இரண்டு மூன்று ஆண்டுகளாக பிரச்சனையாகவே இருந்தது அதை சரி செய்து வந்து கொண்டிருக்கிறோம். பயனாளிகளை தேர்வு செய்து அனுப்புவதில் குளறுபடிகள் இருக்கிறது.
தமிழக அரசு கொடுக்கும் 15 ஆயிரத்திற்கு ஒரு நாளும் குறைவில்லை. பயனாளர் பட்டியல் தாமதம் மத்திய அரசால் ஏற்படுகிறது. இதை மத்திய அமைச்சரிடம் பார்க்கும் பொழுது சொல்லி இருக்கிறோம் அதை சரி செய்வதால் தெரிவித்து இருக்கிறார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க நீண்ட வரிசை நின்றது தொடர்பான செய்தியை பார்த்தோம். ஐந்து கவுண்டர்கள் உள்ளது 10 மணிக்கு மேல் பெரிய கூட்டம் வருகிறது. புற நோயாளிகள் எண்ணிக்கை 500, 600 பேர் தான். ஆனால் மருந்து வாங்க 2000 பேருக்கு மேல் வருகிறார்கள். உடனடியாக இரண்டு மூன்று கவுண்டர்கள் கூடுதலாக வைக்க தெரிவித்து உள்ளோம்.
தற்பொழுது 8 கவுண்டர்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சில அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுப்பதற்கு இணையதள பரிவர்த்தனை மட்டுமே இருப்பதாகவும் ஒரு சில நேரங்களில் நெட்வொர்க் பிரச்சனை மற்றும் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களுக்கு சிரமமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது என்ற கேள்விக்கு, 70% இணையதள பரிவர்த்தனையாகவும் மீதம் பணமாகவும் தான் பெறப்படுகிறது. அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான் உள்ளது என்றார்.