Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

-

- Advertisement -

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் என்றும், ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்காத மண் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆண்டார் குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் அரசு விழாவில் ரூ. 418 கோடியே 15 இலட்சத்து 24 ஆயிரம் செலவிலான 6,760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.390 கோடியே 74 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலான 7,369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.357 கோடியே 43 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,02,531 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மற்றும் சென்னையை சுற்றி ஏராளமான தொழில் வளாகங்களை உருவாக்கியவர் கலைஞர். முத்தமிழறிஞர் கலைஞர்தான் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்றார். கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.18,000 கோடி மதிப்பீட்டில் அனல்மின் நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம், திருத்தணியில் புதிய பேருந்து நிலையம், திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.173 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.183 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் – அரக்கோணம் சாலை, நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது. பொன்னேரி – கவரப்பேட்டை இடையே ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இருண்ட ஆட்சிக் காலத்தில் பத்தாண்டுகள் முடங்கிக் கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.

மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் அளித்து, தன்னம்பிக்கையை உயர்த்தியிருக்கிறது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களால் அரசுப் பள்ளி மாணவர்கள், உயர் கல்வி பயலுவது கடந்த 3 ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது. தொழிற் சாலைகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க “நான் முதல்வன்” போன்ற திட்டங்களை தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கியிருக்கோம். வளமான தமிழ்நாடாக மட்டுமல்லாமல், நலமான தமிழ்நாடாகவும் உருவாக்க மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம். நாட்டுக்கே முன்னோடியான பல முற்போக்குத் திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக நியமிக்க சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தனி மனிதர்களும் வளர்கின்றனர் – தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது – தமிழ்நாடும் வளர்ந்துள்ளது.

திமுக ஆட்சி மீது எந்தக் குறையும் சொல்ல முடியாததால், சிலர் அவதூறு பரப்புகின்றனர். சட்டம் – ஒழுங்கு, நிர்வாகம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகின்றன. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்தோடு உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்க முயற்சிக்கின்றனர். நீட் தேர்வு எதிர்ப்பு. மும்மொழித் திட்டம் நிராகரிப்பு, வக்ஃப் சட்டம் எதிர்ப்பு என இந்திய அளவில் ஓங்கி குரல் கொடுக்கின்றது திமுக. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படையும் மாநிலங்களை ஒன்று திரட்டி வலுவாக குரல் கொடுக்கும் இயக்கம்தான் திமுக. மாநில உரிமையின் அகில இந்திய முகமாக உள்ளது தி.மு.க. என்றார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. மாநில மக்களின் விருப்பத்தை மதிக்காத, சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை மதிக்காத ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வாங்கியுள்ளோம். தி.மு.க.வோட ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமில்ல, இந்தியா முழுவதும் எல்லாருக்குமே தெரிந்துள்ளது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு தருவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் சொல்ல முடியவில்லை. இந்தியை திணிக்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் உறுதியளிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என அமித்ஷாவால் பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டோட பிரதிநிதித்துவம் குறையாது என அமித்ஷாவால் வாக்குறுதி கொடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அழுகிறார்கள் என பிரதமர் பேசிய சுட்டிக்காட்டிய முதலமைச்சர், ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா? என கேட்டது நீங்கள்தானே? என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர், 2011-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தது மோடி தானே? ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் நடத்துகின்றனர் என புகார் சொன்னது மோடி தானே? நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை!

உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்கு குரல் கொடுப்போம் என கலைஞரின் வழித்தடத்தில் பயணிக்கிறேன் என்ற முதலமைச்சர், இந்தியாவில் எந்த மாநில அரசும் முன்வராத நிலையில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மாநில சுயாட்சிக் குழு அமைத்திருக்கிறோம். விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள், தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பெற்றுத்தந்தவர் கலைஞர். நீதியரசர் குரியன் ஜோசப் குழுவின் மூலம் அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் பெற்றுத் தருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால் தான், மக்களுக்குத் தேவையானதை செய்ய முடியும். தன் குழந்தைக்கு என்ன தேவை என்று தாய்க்கு மட்டுமே தெரியும். தன் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என டெல்லியில் இருக்கின்றவர்கள் தீர்மானித்தால் அந்த தாய் பொங்கி எழுவாள். ஒன்றிய பா.ஜ.க. அரசு எல்லா வகையிலும் தமிழ்நாட்டிற்கு தடை ஏற்படுத்துகிறது. எப்படியெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என யோசித்து எல்லா ரூபத்திலும் நெருக்கடி கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய அரசு கொடுக்கும் குடைச்சல்களை மீறி பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து தரவரிசையிலும் தமிழ்நாடு மீண்டும் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் நியாயமான நிதியை கொடுத்தால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும் என்றார். ஒன்றிய பாஜக அரசின் தடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சட்டப்பூர்வமா உடைத்தெறிவேன். மக்களின் ஆதரவோடு தமிழ்நாட்டை எல்லாத் துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக நிச்சயம் உயர்த்திக் காட்டுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நான் அழுகிறவன் அல்ல. ஊர்ந்து போய் யாரின் காலயையும் பிடிப்பவன் அல்ல என்றும் ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பு ஏற்காத மண் தமிழகம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் டெல்லிக்கு எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் தமிழ்நாடு இருக்கும், அதற்கான தன்மை உள்ளது என்று கூறிய முதலமைச்சர், வரும் 2026 ஆம் ஆண்டு திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும். இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துக் கொண்டு நீங்கள் வெற்றி பெற முடியது. உங்களது பரிபாரங்கள் அனைத்தும் சேர்த்துக் கொண்டு வந்தாலும் வெற்றி பெற முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழர்களை எப்படி எல்லாம் கொச்சப்படுத்தினார்கள் சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகம் இல்லாதவர்கள், தமிழர்கள் வெடி குண்டு வைப்பர்கள் என சொல்லி விட்டு மன்னிப்பு கேட்டார்கள். பிரதமர் மோடி ஒடிசாவில் போய், ஐஏஸ் அதிகாரி கோயிலில் திருடப்பட்ட சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்றார். மற்ற மாநிலங்களுக்கு போய் கட்சிகளை உடைத்து ரெய்டு நடத்துவது போல தமிழ்நாட்டை அடிபணி வைக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி 1) கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் – கசவநல்லாத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும். 2) திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூர் – இலட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே, ரூ.23.47 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். 3) திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி செலவில் தாமரைக்குளம், காக்களூர் ஏரி மேம்படுத்தப்படும். 4) பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாவும், சுற்றுலாத் தலமாவும் விளங்கி வரும் பழவேற்காடு ஏரிப்பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும். 5) திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலை, ரூ.51 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி, மேம்படுத்தப்படும். திராவிட மாடல் அரசின் அக்கறையான நிர்வாகத்தால் அனைத்துத் துறையும் வளர்கிறது – அனைத்து தரப்பு மக்களும் வளர்கின்றனர். அனைத்து துறைகளும், அனைத்து தரப்பு மக்களும் வளருவதால் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாபெரும் சமூகப் புரட்சி நடைபெற்று வருகிறது

முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் வந்த முதலமைச்சருக்கு பொன்னேரியில் பொதுமக்கள் பரிசு பொருட்கள் வழங்கி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். காரில் இருந்து இறங்கி நடந்தே பொதுமக்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டு அறிந்ததோடு, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

MUST READ