மதுரையை சேர்ந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை சட்டவிரோதமாக திரையரங்குகளில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் செயல்களை பலர் செய்து வருகின்றனர். இவ்வாறு புதிய படங்களை பதிவேற்றும் பல இணையதளங்கள் இருந்தாலும், ‘தமிழ் ராக்கர்ஸ்’மக்களிடையே மிகப்பிரபலம். 90 கிட்ஸுகளை அதிகம் திரையரங்குகளுக்குச் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டதில் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் பங்கு மிக அதிகம். இந்த இணையதளம் தொடர்பாக திரைத்துறையினர், திரையரங்க உரிமையாளர்கள் பல்வேறு புகார்களை அளித்தும், அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முக்கிய அட்மினாக செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடித்து கேரள சைபர் கிரைம் போலிசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஏரியஸ் தியேட்டரில் ராயன் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது, அதனை பார்த்த நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜின் மனைவி சுப்ரியா உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக திரையரங்குக்கு வந்த காக்நாடு சைபர் கிரைம் போலீஸார், செல்போன் மூலம் படத்தை பதிவு செய்துகொண்டிருந்த மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து காக்நாடு சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி, டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை காவல்துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.