சென்னை மாகாணமாக இருந்த நிலப்பரப்பிற்கு 1967- ஜூலை 18 ஆம் நாள் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தது அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திமுக அரசு. அதனால் தமிழ்நாடு என்றாலே திமுக தான் என்பதை தைரியமாக அழைக்கலாம்.

1956ல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்துடன் இருந்த கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகியவை மொழிவழி மாநிலமாக பிரிந்து சென்றன. எஞ்சிய நிலப்பரப்பை சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அப்பொழுது தந்தை பெரியார், மொழியின் அடிப்படையில் எல்லோரும் பிரிந்து சென்று விட்டனர். மீதி உள்ள நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒரு கட்டத்தில் இனிமேல் தமிழ்நாடு என்றே பேசவும், எழுதவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1957 இல் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை துவங்கினார். உண்ணாவிரதம் துவங்கிய 76வது நாள் அவர் உண்ணாவிரதம் இருந்த பந்தலில் உயிரிழந்தார்.
இதற்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 1961 பிப்ரவரி 24ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளதா அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த நிலையில்தான் 1967 – மார்ச் மாதம் 6 ஆம் தேதி தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டத் தீர்மானித்தது. அதன்படி இதற்கான தீர்மானத்தை 1967 ஜூலை 18ஆம் தேதி முதலமைச்சர் அறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
அந்தத் தீர்மானத்தில் பேசிய அண்ணா, “நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது” என்றார்.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதும், அறிஞர் அண்ணா எழுந்து “தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்” என்று கூறிவிட்டு, “தமிழ்நாடு” என மூன்று முறை குரல் எழுப்பினார். சட்டப்பேரவையின் எல்லா உறுப்பினர்களும் “வாழ்க” என்று 3 முறை கோஷம் எழுப்பினர்.