
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மெல்ல மெல்ல வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என முதலில் சொல்லப்பட்டது. பின்னர் வளிமண்டல மேற்பரப்பில் நிகழ்ந்த வானிலை மாற்றம் காரணமாக, வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு முற்றிலுமாக மாறிப்போனது. வானிலை அமைப்பு மாறியதால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும் வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நீடித்து வந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், தெற்கு உள் கர்நாடக பகுதிகளை கடந்து சென்று மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



