சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மா பாளையத்தில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா வளாகத்தில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாவட்டத்தின் வளர்ச்சியோடு, உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால் ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை வரவேற்ற அப்பகுதி மக்களுக்கு, தற்போது நடைபெற்றுவரும் ஆபத்து நிறைந்த சாயப்பட்டறை ஆலை அமைக்கும் பணி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நீர்நிலைகள் மட்டுமல்லாது நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சேலத்தில் அமையும் இந்த சாயப்பட்டறை ஆலைகளால் அம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த நீர் ஆதாரமும் மாசடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டம் மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா்.



