பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய 12 நாட்கள் ஆனதாகவும், ஆனால் சென்னை மாணவி வழக்கில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- சென்னை மாணவி விவகாரத்தில் மட்டுமல்லாமல் எந்த பாலியல் வன்முறை சம்பவங்களிலும் நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசு வேடிக்கை பார்த்ததில்லை, விலகி நிற்பதும் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பொள்ளாச்சியில் நடந்தது ஒரு பெண் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றம் அல்ல தொடர்ச்சியாக பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை 2 வருடமாக நடந்துள்ளது ஒரு கும்பல் செய்து வந்துள்ளது. அன்றைய அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐயிடம் சென்ற பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதான் அன்றைய முதல்வர் சார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு லட்சனம். சிபிஐ விசாரணையில் பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர் ஆள்தான் நடத்தப்பட்டது என தெளிவாக கூறிவிட்டார்கள். இவர்களை காப்பாற்றுவதற்காக தான் இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் நாடகம் ஆடியது. இதற்கு தான் நான் அன்றைக்கே சொன்னேன் பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி சம்பவம் தான் என்று.
இப்படி பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் எல்லாம் பேட்சசுகள் அணிந்து வந்து உட்காருகிறார்கள். இப்போது பாதியிலேயே சென்று விட்டார்கள். இதுபோல நூறு சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும். ஒரு முன்னாள் முதலமைச்சர் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர் தன் பொறுப்பையும் தகுதியையும் மறந்து பேட்ச் அணிந்து வந்து, அரசியலில் எந்த அளவிற்கு தாழ்ந்து போக முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய 12 நாட்கள் ஆனது. ஆனால் சென்னை மாணவி வழக்கில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இது தொடர்ந்து சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ஏனோ இதை எல்லாம் அரசியல் லாபத்திற்காக நோக்கத்திற்காக எதிர்க்கட்சியினர் மறைக்கிறார்கள்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பாஜகவினர் பொது வெளியிலே பேசி வருகின்றனர். பாஜகவின் கதையை சொல்லி இந்த அவையின் மாண்பை நான் குறைக்க விரும்பவில்லை. அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது பொறுப்புக்களை உணர்ந்து பேச வேண்டும். உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. வேறு யாரேனும் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிய வந்தால் யாராக இருந்தாலும் சரி எந்த பின்னணியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி கடும் நடவடிக்கையை நிச்சயமாக உறுதியாக நாங்கள் எடுப்போம். மீண்டும் ஒருமுறை இந்த அவைக்கு தெரிவிப்பது திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சி. மகளிருக்காகவே நாள்தோறும் திட்டங்களை தீட்டி அவர்களின் பேராதரவோடு செயல்பட்டு வரும் இந்த அரசை அடிப்படையில்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அதன் மூலமாக கலங்கப்படுத்தலாம் என சிலர் நினைக்கின்றனர் அது ஒருபோதும் எடுபடாது. இறுதியாக உங்களிடம் பணிவோடு கேட்பது திமுக அரசை களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு உயர்கல்வி கற்க வரும் மாணவர்களை ஆச்சுறுத்தி அவர்களின் கல்வியை கெடுத்து விடாதீர்கள் இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.