சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும்” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

“எங்கே கோளாறு நடந்தது? எங்கு மெத்தனம் ஏற்பட்டது? என்பதையே நாம் ஆராய வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவே இருக்காது” என்று ஸ்டாலின் கூறினார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “எப்படியும் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மக்கள் நினைத்ததால், சிலர் அலட்சியமாக வாக்களித்ததாகவும், தற்போது அதற்காக வருந்துவதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின்றன. இதுவே நம்முடைய ஐந்தாண்டு நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என அவர் தெரிவித்தார்.
தனது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலனுக்காக கடுமையாக உழைத்ததாக கூறிய ஸ்டாலின், “என் சக்திக்கு மீறியும் உழைத்தேன். உங்களையும் ஓய்வில்லாமல் உழைக்க வைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத பல சாதனைகளை நமது அரசு செய்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் ஆட்சியாக திமுக அரசு இருந்தது” என்றார்.
அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று என்றும், ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ளும் பக்குவம் திமுகவுக்கு அதிகம் என்றும் அவர் கூறினார். “மற்ற கட்சிகளைப் போல நமது எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டுகளிலும் நட்சத்திர விடுதிகளிலும் தங்க வைக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. தோல்வியிலும் நாங்கள் தைரியமாக இருந்தோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவில் விரைவில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக தனியாக ஒரு விசாரணை அமைப்பு உருவாக்கப்படும் என்றும், இணையதளம் மூலம் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் அமைப்பு முறையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இறுதியாக, “சூரியன் ஒருபோதும் மறையாது; மீண்டும் உதித்தே தீரும். அது இயற்கை நியதி மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் அதுதான்” என்று கூறி கட்சியினருக்கு உற்சாகம் அளித்தார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமனம்!
