கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதாக ராதா கிருஷ்ணன் கூறியுள்ளாா்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார். ‘அனைத்து விதமான உணவகங்களுக்கும் டீக்கடைகள், வீடுகளில் சமைப்பவர்களுக்கும் கேஸ் தட்டுப்பாடு பிரச்சனை நீங்கும் வரை மின்கட்டண சலுகை தொடரும். கூடுதல் மின் தேவையை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு, குறு தொழில் துறையினா் மின்சார அடுப்பு தயாாித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக கடன் வழங்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் துறையினா் மின்சார அடுப்புகள் கொள்முதல் செய்வதில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், அதிகபட்சமாக 3.7 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கவும் மின்சார அடுப்பு தொடா்பான தொழில்களுக்கு தமிழ் நாடு மகளிா் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் வழங்கவும், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மானியத்துடன் கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பெட்ரோல் விற்பனை 100 சதவீதம் டீசல் விற்பனை 75 சதவீதம் அதிகாித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் 9 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளது என எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை தெரிவித்துள்ளாா். அச்சத்தில் மக்கள் அதிகமாக பெட்ரோல், டீசல் நிரப்பியதால் விற்பனை அதிகாித்துள்ளது. தமிழ் நாட்டில் சமையல் எாிவாயு சிலிண்டா்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளன. வா்த்தக பயன்பாட்டு சிலிண்டா்களில் மருத்துவமனைகளுக்கு முன்னுாிமை அளிக்கப்படும்.
கேஸ் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் தொழில் துறையினருக்கு மின்கட்டணச் சலுகை மானியத்துடன் வழங்க முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். 100 மெகாவாட் வரை மின் தேவை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க ஏற்பாடு செய்யப்படும்’ எனவும் மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
