Homeசெய்திகள்தமிழ்நாடுதிருக்குவளை முதல் டெல்லி வரை மு.கருணாநிதியின் வாழ்க்கை பயணம்!

திருக்குவளை முதல் டெல்லி வரை மு.கருணாநிதியின் வாழ்க்கை பயணம்!

-

 

திருக்குவளை முதல் டெல்லி வரை மு.கருணாநிதியின் வாழ்க்கை பயணம்!
File Photo

கடந்த 1924- ஆம் ஆண்டு ஜூன் 03- ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மு.கருணாநிதி. தொடக்கக் கல்வியை திருக்குவளையிலும், திருவாரூர் மாவட்ட நாட்டாண்மைக் கழகத்தின் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

இசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?

நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சிறந்த பேச்சாளருமான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட மு.கருணாநிதி, தனது 14- வது வயதில் தன்னை முழுமையாக அரசியல், சமூக இயக்கங்களில் ஈடுபடுத்திக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, 1953- ஆம் ஆண்டு நடைபெற்ற கல்லக்குடி போராட்டத்தில் கலந்துக் கொண்டார். பின்னர், அண்ணா, பெரியாரின் கொள்கைகள் மற்றும் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், 1957- ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.

கடந்த 1960- ஆம் ஆண்டு முதல் 1969- ஆம் ஆண்டு வரை தி.மு.க.வின் பொருளாளராகவும், 1969- ஆம் ஆண்டு முதல் தனது மறைவு வரை (2018) சுமார் 50 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைவராகப் பதவி வகித்துள்ளார். கட்சியின் தலைவர் பதவியை நீண்ட ஆண்டுகள் வகித்த ஒரே தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

கடந்த 1969, 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் திரையுலகின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், பல்வேறு நாடகங்கள், திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல் போன்றவற்றையும் எழுதியுள்ளார். நாடகத்தின் போது எம்.ஆர்.ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டத்தை அளித்தார்.

கடந்த 1957- ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, முதன் முறையாக தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, 1962, 1967, 1971, 1977, 1980, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றத் தேர்தல்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் – 4

இந்திய அரசியல் வரலாற்றில் அதிக முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

கடந்த 1976- ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக, அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசைக் கலைத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைச் செய்திருந்த நிலையில், ஆட்சிக் கலைக்கப்பட்டது.

தேசிய தலைவர்களுடன் இணக்கமாக இருந்தவர் மு.கருணாநிதி. முதலில் பா.ஜ.க. வையும், பின்னர் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்த மு.கருணாநிதி, பின்னாளில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. உடனும், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, மத்தியில் கூட்டணி ஆட்சியையும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியையும் நடத்தியவர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் முதல் ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, சந்திர சேகர், நரசிம்மராவ், அடல் பீகாரிவாஜ்பாய், தேவ கவுடா, குஜரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை மத்தியில் ஆட்சி செய்த பிரதமர்களைக் கண்டவர்.

மாநில உரிமைகளை நிலைநாட்டியவர். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர். பெண்களுக்கு சொத்தில் சரி உரிமை மற்றும் பங்கு என சட்டம் இயற்றியவர்.

தமிழுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி, உலகளவில் தமிழுக்கு என்று தனி முத்திரையைப் பதிவு செய்தவர். தனது எழுத்துக்களால் மத்தியில் ஆண்ட கட்சிகளை அதிர வைத்தவர். மேலும், மத்திய அமைச்சர் பதவிகளின் முக்கிய இலாகாக்களை தமிழக எம்.பி.க்கள் அலங்கரிக்க காரணமாக இருந்தவர். நீண்டகாலம், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே கட்சி தி.மு.க. தான்.

அந்த காலத்திலேயே, மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை, தகவல் தொடர்புத்துறை, ரசாயனம், வானொலி, ஒளிபரப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் தி.மு.க. வசமே இருந்தது. 2ஜி அலைக்கற்றை ஊழல், இலங்கை தமிழர்கள் படுகொலை உள்ளிட்ட விவகாரங்கள் தி.மு.க.வுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது.

இதனால் மத்தியில் கூட்டணியை முறித்துக் கொண்ட தி.மு.க., மாநிலத்தில் அடுத்தடுத்து தேர்தல் தோல்வியைச் சந்தித்து, ஆட்சியை இழக்க நேர்ந்தது. கூர்மையான சிந்தனை, எப்போது என்ன செய்ய வேண்டும் என்பன போன்றவை மு.கருணாநிதியின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர்

அண்டை மாநில முதலமைச்சர்களும் மு.கருணாநிதியுடன் நட்புப் பாராட்டினர். ‘தமிழ்நாடு’ என்ற மாநிலத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி, உலகறிய செய்தவர் கலைஞர். கட்சியையும், ஆட்சியையும் உறுதியுடனும், ராணுவக் கட்டுப்பாடுடனும் வழிநடத்தியவர் மு.கருணாநிதி.

இந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7- ஆம் தேதி அன்று தனது 94வது வயதில் மு.கருணாநிதி காலமானார். தமிழகமே கண்ணீரில் மூழ்கிய அந்த நாளில், தேசிய தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் என அனைவரும் சென்னையில் முகாமிட்டு, மு.கருணாநிதிக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்தி, அவரை வழியனுப்பி வைத்தனர்.

MUST READ