தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீரென அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டதில் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் பகுதியில் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு ஆலையில் வழக்கபோல் பெண்கள் பணியில் இருந்த நிலையில் இரவு 11 மணியளவில் திடீரென அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து மின் விபத்து ஏற்பட்டது. இதனால் ஆலை முழுவதும் அமோனியா கேஸ் பரவியதில் அங்கு பணிபுரிந்த பெண்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என 21 பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். மயங்கி விழுந்த பெண்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.