தூத்துக்குடி தனியார் கல்லூரி பொங்கல் விழாவையொட்டி பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள வ.உ.சி கலைக் கல்லூரியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஒரே வண்ணத்தில் சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். பின்னர் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பாக மாணவர்கள் தங்களது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் ஒலிகளை எழுப்பி சாகசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதி வழியாக சென்ற கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர், அந்த பகுதிக்கு விரைந்து சென்று பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும், சிலர் தங்களது பைக்கை வேகமாக எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனை செய்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தர்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், சைலன்சர்களை பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், அபராதமாக சுமார் 1,41,000 அபராதத்தை விதித்தனர்