திருவாரூரில் மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி. இவர் 27வது வார்டு அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், பாலாஜியின் மனைவி தாய் மீனாட்சி, கடந்தாண்டு தனது மாமனார் ரங்கநாதன், தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரங்கநாதன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தாய் மீனாட்சிக்கும், அவரது கணவர் பாலாஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று பாலாஜி தனது மனைவியிடம், தந்தை ரங்கநாதன் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். சாதுரியமாக செயல்பட்ட தாய் மீனாட்சி, பாலாஜியிடம் இருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து, அதிமுக செயலாளர் பாலாஜியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பாலாஜிக்கு, அவரது நண்பர் விஜயபாஸ்கர் என்பவர் நாட்டு துப்பாக்கியை கொடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து, விஜயபாஸ்கரையும் காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாட்டுத் துப்பாக்கி வடமாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி என்றும், அதனை திருவாரூர் நாகை புறவழிச்சாலையில் சாலையோரம் பையில் சுற்றப்பட்டு கிடந்ததாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். வட மாநிலத்திலிருந்து வந்திருந்தவர்கள் இந்த துப்பாக்கியை தவறுதலாக விட்டு சென்று இருக்கலாமா? என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.