தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, மின் வாரியம் நவம்பர் 15-ஆம் தேதி துவங்கியது. ஆதார் எண்ணை இணைக்க வசதியாக, மின் வாரியத்தின் 2,811 பிரிவு அலுவலகங்களிலும், நவம்பர் 28ம் தேதி துவக்கப்பட்ட சிறப்பு முகாம்,தற்போதுவரை செயல்பட உள்ளது. ஆதார் இணைப்புக்கு, எண் மட்டும் பதிவு செய்வதுபோன்ற எளிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.28 வரை அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 7 லட்சம் பேர் இணைக்க வேண்டியிருப்பதால் இன்று அவகாசம் முடிந்த நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2.60 கோடி பேர் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
