Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது!

திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது!

-

திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது. 30 அடி உயரம், 30 அடி அகலத்தில் 300 டன் எடையுடன் தேர் ஆடி அசைந்தாடி வருவதைக் காண கண்கொள்ளா காட்சியாகும். இக்கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த ஜனவரி 25ம் தேதி நடைபெற்றது. மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து ஆழித்தேரில் தியாகராஜசுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. தனக்கே உரிய அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் தேரில் தியாகராஜருக்கு இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. ஆழித் தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளிய நிலையில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ