
சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்ததாகவும், இதனால் அரசுக்கு 23 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவுச் செய்திருந்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கு தொடர்புடைய அனைவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி
சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கடந்த 2014- ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி மீதான தண்டனையை ரத்துச் செய்தும், வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.