பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கான டோக்கன் டிச.30ம் தேதி விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த முறை பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கு பைகள் வழங்கப்படாது. அதனால், பொதுமக்கள் மறக்காமல் வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறை இணை இயக்குநர், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு. அரிசி, பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
