தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 18ம் தேதி வரை இயக்கலாம் என தமிழக அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 600 பேருந்துகள் வெளிமாநில பதிவு எண் கொண்டவை ஆகும். இதனால் தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரி ஆகியவை குறைவாகவே கிடைக்கின்றன. இதன் காரணமாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதாவது ஜூன் 14ம் தேதிக்குள்ளாக பதிவு எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. ஆனால் அவை முறையாக பின்பற்றப்படாததால், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகை மேற்கொண்டது.
அதன்படி, வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் ( ஜூன் 14) தமிழகத்தில் இயங்கக் கூடாது என போக்குவரத்துத் துறை அறிவித்தது. இதனையடுத்து இன்னும் 1 மாத காலம் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு போக்குவரத்து ஆணையரகம் , வரும் ஜூன் 18ம் தேதி காலை வரை தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் திங்கள் கிழமைக்குப் பிறகு வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கினால், விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.