சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் செயல்படும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு மற்றும் புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் , நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம் குறைகளை கேட்டதோடு , குறைகளை களைய நடவடிக்கைகள் எடுக்குமாறு மருத்துவமனை டீன் தேவி மீனாள் , மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மருந்து , மாத்திரைகள் விநியோகிக்கும் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் உள்ளனவா? என்பது குறித்து மருத்துவமனை முதல்வரிடமும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறை தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் நோயாளிகளுக்கு வழங்கப்பட கூடிய சிகிச்சை குறித்தும் அதற்கு தேவையான உபகரணங்கள் செயல்பாடு குறித்தும் விரிவாக கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன், மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளனரா ? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும், சேலம் அரசு பொது மருத்துவமனை பொறுத்தவரை அனைத்து விதமான நோய்களுக்கான மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் நோயாளிகளின் குறைகளை உடனடியாக சரி செய்திட அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வின் போது சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி, அரசின் பொது மருத்துவமனை முதல்வர் தேவி மீனால் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/industry-records-record-revenue-of-rs-1984-crore-in-november/13201