திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்துப் பேசுகையில்:
“தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை முதல்வர் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார். இதுவரை ஒவ்வொரு துறையிலும் கப்பம் கட்டித்தான் பணிகள் நடைபெறும் என்ற நிலை நீக்கப்பட்டு, தற்போது கமிஷன் இல்லாத நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. 100 நாட்களைக் கடந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் வழங்கி, எனது நற்சான்றை அளிக்கிறேன்” என்றார்.

அமைச்சர்களின் பேச்சு குறித்துத் தொடர்ந்த அவர், “அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். ராகுல் காந்தியைப் பிரதமராக முன்னிறுத்துவது தொடர்பான விஷயத்தில், ஒருசில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஒட்டுமொத்த அரசின் கருத்தாகாது. இதுபோன்ற விவகாரங்களில் முதல்வர் தலையிட்டு அறிவுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
காவிரி நீர் விவகாரம் குறித்துப் பேசிய வைகோ, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு பக்கபலமாக இருந்து துரோகம் செய்து வருகிறது என்று சாடினார்.
மேலும், பெரியார், அம்பேத்கர் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் அரசு ஆவணங்களில் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறை முயற்சியை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
5 ஆண்டுகள் நிலைக்காது விஜய் தலைமையிலான தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி வேலூரில் பரபரப்பு பேட்டி

