ஒரு சிலர் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை – வானதி சீனிவாசன்
ஒரு சில நபர்களின் விலகலால் பா.ஜ.கவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மகளிரணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்
பி. ஆர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “ஒவ்வொரு கட்சியிலிருந்து மாற்றுக் கட்சிக்கு செல்வதும், மாற்றுக் கட்சியில் இருந்து இங்கு வருவதும் வழக்கம்தான். பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு வெளியே போய் இருக்கின்றனர். அவருக்கு சில அரசியல் காரணம் இருக்கலாம். வெளியில் செல்லும் பொழுது அவர்களின் கருத்துக்களை சொல்வார்கள். இந்த விவகாரத்தை பொருத்தவரை, பாஜகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாஜக புதிய நபர்களால் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, ஒரு சில நபர்களின் விலகலால் பா.ஜ.கவிற்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவித்தார்.


