சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட பெங்களூரு முதன்மை அமர்வு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பெங்களூருவில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புத்தகத்தில் தன்னிடம் கருத்துக்கள் பெறாமல் தன்னைப்பற்றி பல பதிவுகள் உள்ளதாகவும், அந்த பதிவுகள் அவதூறு கருத்துகளாக இருக்கலாம் என்பதால் தன்னிடம் புத்தகத்தின் பிரதியை கொடுத்து ஒப்புதல் பெறாமல் இந்த புத்தகத்தை வெளியிட கூடாது என்றும் நக்கீரன் தலைமை ஆசிரியர் கோபால் சார்பில் பெங்களூரு இரண்டாம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீது வழக்கறிஞர் நடேசன் வாதிடும் போது, நக்கீரன் கோபால் அவரிடம் அனுமதி பெறாமல் இந்த புத்தகத்தை வெளியிட கூடாது, ஆகையால் இந்த புத்தக வெளியீட்டுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீனிவாசன் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து சிவசுப்பிரமணியன் நக்கீரன் கோபால் அவரிடம் அனுமதி பெற்ற பின்பு தான் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்றும் தடை உத்தரவை மீறி புத்தகம் வெளியிடப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்கறிஞர் நடேசன் தெரிவித்துள்ளார்.
