தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அதிகாலையிலேயே தொண்டர்கள் தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் கட்சிக்கொடிக்கான விளக்கத்தை தெரிவிப்பதாக கூறியிருப்பதால் அவர் என்ன பேசப்போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் விக்கிரவாண்டியில் குவியத்தொடங்கினர்.
தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் மாநாடு நடைபெறும் பகுதிக்கு வருகை தந்த விஜய், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கேரவனில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 9 மணியளவில் மாநாடு திடலுக்கு வந்த விஜய் அங்கு நடைபெற்று வந்த இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், பின்னர் மீண்டும் கேரவனுக்குச் சென்றுவிட்டார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் மூலம் விக்கிரவாண்டிக்கு வந்த தொண்டர்கள் நெடுஞ்சாலை ஓரமாகவும், மாநாடு திடலை சுற்றியுள்ள பகுதிகளிலேயே இரவு முழுவதும் காத்திருந்தனர். அவ்வப்போது தளபதி, தளபதி என முழக்கமிட்டு வந்த தொண்டர்கள் அதிகாலையிலேயே மாநாடு திடலுக்கு வரத்தொடங்கினர். இரவு முழுவதும் பணியில் இருந்த தனியார் பாதுகாவலர்கள் ஓய்வெடுக்கச் சென்று, புதிய பாதுகாவலர்கள் பணிக்கு வருவதற்கு உள்ளான இடைப்பட்ட நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர். தடுப்புகளை தாண்டிக் குடித்து உள்ளே சென்ற அவர்கள் மாநாடுக்கு அருகில் இருந்த அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த முன் இருக்கைகளில் இடம்பிடித்து அமர்ந்துகொண்டனர்.
அத்துடன் விஜய் நடந்துவந்து தொண்டர்களை சந்திப்பதற்காக போடப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையிலும் அவர்கள் ஏற முயற்சித்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்களை சமாளிக்க முடியாமல் தினறினர். மாநாட்டுக்கு 2 மணிக்கு பின்னரே பொதுமக்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில், தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி எகிறி குதித்து உள்ளே நுழைந்து வருகின்றனர்.