சற்றுமுன் விக்கிரவாண்டி எம்எல்ஏவாக பதவியேற்றார் அன்னியூர் சிவா.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 வாக்குகளும் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். இந்த வெற்றியின் மூலம் ஆளும் கட்சியான தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதியை மீண்டும் தன்வசப்படுத்தி அசத்தியது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று காலை சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பலம் 133 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து எம் எல் ஏவாக பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களுக்கும் தேவையான நலத்திட்ட பணிகளைச் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.