திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். முதற் கட்டமாக நாமக்கல்லுக்கு சென்ற நடிகர் விஜய்க்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- சாரி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சாப்டீங்களா எல்லாரும்? போக்குவரத்து ஹப் ஆக உள்ள நாமக்கலும், முட்டையும் ரொம்ப பேமஸ். தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவான முட்டையை கொடுக்கும் ஊராக மட்டுமில்லாமல், உணர்ச்சியூட்டும் மண்ணும் இதுதான். அண்ணன் கேப்டன் பேசிய, ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும், நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன் அவர்கள் தான். இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய, சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி எண் 456-ல் கொடுத்தது யாரு? சொன்னாங்களே… செஞ்சாங்களா?” நாமக்கல்லில் முட்டை சேமிப்புக்கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமுடைய மருத்துவமனையில் கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது நாமக்கல்லை சேர்ந்த பெண் விசைத்தறி தொழிலாளர்கள் என்று சொல்லப்படுகிறது. இத்திருட்டுக்கு கந்துவட்டி கொடுமைதான் ஆரம்ப புள்ளி. அச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்றாலும் தவெக ஆட்சி ஏற்பட்ட உடன் தண்டிக்கப்படுவார்கள். விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து எங்க தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
அடிப்படை சாலை வசதி, குடிநீர், பெண்கள் பாதுகாப்பு போன்ற போன்ற அடிப்படை விஷயங்களை தான் மக்கள் கேட்கிறார்கள். அதை சமரசமின்றி நாங்கள் செய்வோம் என்று சொல்லிவிட்டோம். இதை தான் எல்லோரும் சொல்கிறார்கள். இவர் என்ன புதிதாக சொல்வார்? என்கிறார்கள். திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.