நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைத்தால் சில மாநிலங்களுக்கு அதிக நன்மையும், சில மாநிலங்களுக்கு பாதிப்பும் ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற விவாதம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாநிலங்களின் தற்போதைய விகிதாச்சாரம் பெரிதும் பாதிக்கப்படாத வகையில் புதிய மாதிரியை பொருளாதார ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, தற்போதுள்ள 543 தொகுதிகளில் 170 தொகுதிகளை மட்டும் பிரித்து மறுசீரமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதில் 59 தொகுதிகளை இரண்டாகப் பிரிக்கவும், மேலும் 111 தொகுதிகளை மூன்றாகப் பிரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 59 தொகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் அவை 118 தொகுதிகளாக மாறும். அதேபோல், 111 தொகுதிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டால் அவை 333 தொகுதிகளாக அதிகரிக்கும். இதன் மூலம் மொத்தம் 451 புதிய மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகள் உருவாகும். இவற்றுடன் பிரிக்கப்படாத 373 தொகுதிகளையும் சேர்த்தால், மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையின் முக்கிய அம்சம், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையாத வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகும். தற்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் சேர்த்து மொத்த மக்களவைத் தொகுதிகளில் சுமார் 23.7 சதவீதத்தை கொண்டுள்ளன. மறுசீரமைப்புக்குப் பிறகும் இந்த விகிதம் 23.6 சதவீதமாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் தற்போதைய 45.6 சதவீத பிரதிநிதித்துவம், மறுசீரமைப்புக்குப் பின்னர் 45.2 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு பிராந்தியத்திற்கும் அதிகப்படியான ஆதாயம் கிடைக்காத வகையில் சமநிலை பேண முயற்சி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில வாரியாக பார்க்கும்போது, தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் தற்போதைய 39 இலிருந்து 59 ஆக உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கேரளத்தின் தொகுதிகள் 20 இலிருந்து 30 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகள் 120 ஆக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில், புதுச்சேரி, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான் – நிகோபார் தீவுகள், சண்டிகர் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளின் மக்களவைத் தொகுதிகளை இரட்டிப்பாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால், நாட்டின் தேர்தல் அரசியலிலும், மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்!
