தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரே நாளில் 20000 ரூபாய் இழந்ததை தொடர்ந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் இதில் பணத்தையும் தொடர்ந்து இழந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 ஆயிரம் இழந்ததாக கூறப்படுகிறது இதனால் மன வேதனையில் அருண்குமார் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்பு வீட்டில் மேற்கூறையில் இருந்த கொக்கியில் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இரவில் அவரது மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள் உடலை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அருண்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆன்லைன் ரம்மியை ஊக்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பிரபலங்கள் விளம்பரங்கள் செய்வதால் அதைப் பார்த்து ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த நபர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சோகம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஆன்லைன் ரம்மியை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலை தீர்வு இல்லை ! எந்தப் பிரச்சினையையும் இந்த முடிவு தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
ராமநாதபுரம் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து… திருப்பூரை சேர்ந்த 3 பேர் பலி!