தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து  நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, மழை அளவைப் பொருத்து ரெட், ஆரஞ்சு, மஞ்சள் என மூன்று நிலைகளில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தகவலின்படி, அக்டோபர் 21 ஆம் தேதி காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. அந்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் புதிய மதிப்பீட்டின்படி, அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய மற்றொரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறாது என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
இந்த தாழ்வுப் பகுதி தாக்கத்தால், பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி பெரிய காலாப்பேட்டையில் அதிகபட்சமாக 25 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 21 செ.மீ, பாகூரில் 19 செ.மீ, வானூர் மற்றும் கடலூரில் தலா 19 செ.மீ மழை பதிவாகியுள்ளன.
இதன் விளைவாக, வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்கள் தீவிரமாக இருக்கும் எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைநகரில் தீபாவளிக்கு பின் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரிப்பு….



