அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ பிடித்ததால் உடனடியாக விமானம் திருப்பி விடப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் 187 பயணிகள் வாழ்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
துபாய் தலைநகர் அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான B737-800 விமானம் 187 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டது.

விமானம் ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே பறக்கத் தொடங்கியபோது, என்ஜினில் தீப்பிழம்பு வருவதை விமானி கண்டுபிடித்துவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட விமானி இன்ஜின் பழுது குறித்து அபுதாபி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட விமான நிலைய ஊழியர்கள் ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதற்கு முன்னேற்பாடுகள் செய்தனர். பின்னர் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பின்னர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் மீண்டும் அபுதாபி சர்வதேச விமான நிலைத்திலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறங்கியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். விமானத்தில் தீ என தகவல் பரவியதால் செய்வதறியாது பதற்றம் அடைந்தனர். அனைவரும் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என அவர்கள் நம்பும் கடவுளை பிரார்த்தித்தனர். இதையடுத்து விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் மீண்டும் இந்த உலகில் வாழ்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதுகுறித்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், அபுதாபியில் இருந்து கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் ஒன்றில் தீப்பிழம்புகள் கண்டறியப்பட்டதால் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஜனவரி 23 அன்று, திருவனந்தபுரத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கத் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 45 நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற விமானம் தரையிறங்கியதும் அதில் பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபேன்ற சர்ச்சைகள் ஏர் இந்தியாவுக்கு வருவதால் இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.