பிரிட்டன் பணக்காரராக அறியப்படும் இந்தியாவை சேர்ந்த அஜய் இந்துஜா குடும்பத்தினர் வீட்டு பணியாளருக்கு உரிய ஊதியம் வழங்காமல் பணி சுரண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரிட்டனின் முதல் ஆயிரம் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கோபிசந்த் இந்துஜா 37.196 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
அத்தகைய பெரும் பணக்காரரின் மகனான ஜெனிவாவில் வசிக்கும் அஜய் இந்துஜா குடும்பத்தினர் மீது தற்போது ஸ்விஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் குடும்பத்தினர் வளர்ப்பு நாய்க்கு செலவிடும் தொகையை விட குறைவாக வீட்டுப் பணியாளருக்கு ஊதியம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பணியாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ.584 சம்பளமாக நிர்ணயித்து 18 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாக கூறினார்.
ஊழியரின் பாஸ்போர்ட்டையும் இந்துஜா குடும்பத்தினர் வாங்கி வைத்திருப்பதால் அவர்கள் அனுமதியின்றி வெளியே செல்ல முடிவதில்லை என்பதுடன் அவர்களது சம்பளத்தை கூட செலவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
அஜய் இந்துஜா மற்றும் அவரது மனைவியை கைது செய்வதோடு பாதிக்கப்பட்ட ஊழியருக்கு 33 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இந்துஜா குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.