முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.

குறிப்பாக வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். சில அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டது.


என்எல்சி நிறுவனத்தின் இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்த சென்றனர். அப்போது போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே என்எல்சி நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த அழைப்பை பெரும்பாலான வியாபாரிகள், பொதுமக்கள் நிராகரித்து விட்டனர். அதன்படி, முழு அடைப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் 100 சதவீத அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டுவருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக பல இடங்களில் கான்வாய் முறையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


