பிரபல இசை அமைப்பாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவர் ரஜினி முருகன், ஜில்லா, போகன், விஸ்வாசம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் பாடகராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஹேக்கர் என்னுடைய கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை மாற்றி கடந்த 24 மணி நேரத்தில் உள்ளடக்கத்தை பதிவிட்டிருக்கிறார். எனவே நான் தற்போது என்னுடைய எக்ஸ் கணக்கை மீட்டெடுக்க பணியாற்றி வருகிறேன். அதற்காக எக்ஸ் ஆதரவை அணுகியுள்ளேன். நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருப்பதனால் என்னுடைய நம்பகத் தன்மையும் என்னை பின்தொடர்பவர்களுக்கான தொடர்பும் எனக்கு மிகவும் முக்கியம். என்னுடைய கணக்கில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான செய்திகளை புறக்கணிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.