பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் – பிரதமர் மோடி இடையே 6 மாதங்களாக நடைபெற்று வரும் மோதல் தற்போது உச்சமடைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பாஜக புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோடி இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கடந்த 1980களில் தொடங்கப்பட்ட பாஜக கட்சி முதன்முறையாக தலைவர் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் மோடியை 2வது முறை பிரதமர் பதவியை நிறைவு செய்த உடன், அவரை பதவியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும். அதற்கு மேல் அவருக்கு பிரதமர் பதவி வழங்கக்கூடாது என்று முடிவு செய்தார்கள். பாஜகவின் சட்ட திட்டங்களின் படி ஒருவர் இரண்டு முறைதான் பிரதமராக முடியும். அதேபோல் பாஜக தலைவராகவும் 2 முறை தான் இருக்க முடியும். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற மோடி பிரதமர் ஆகிவிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் தான், பாஜக, வி.ஹெச்.பி, ஏபிவிபி போன்ற அமைப்புகளின் தாய் அமைப்பாகும். இதனை குஜராத்திகள் கைப்பற்றிய நிலையில், அமித்ஷா இரண்டு முறை பாஜக தலைவராக இருந்துவிட்டார். பிரதமராக மோடி வருகிறபோது, அவருக்கு நிகரான தலைவராக இருந்தவர் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங். அடுத்த பிரதமர் வேட்பாளராக அத்வானியால் முன்மொழியப்பட்டவர்களில் முக்கியமானவர் சிவராஜ் சிங் சவுகான். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த அவரை பிரதமராக கொண்டுவரலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், மோடி பிரதமர் பதவியை கைப்பற்றிவிட்டார். அதன் பிறகு அமித்ஷாவை பாஜக தலைவராக கொண்டுவந்து குஜராத்திகள் ஒட்டுமொத்த கட்சியையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டனர். குறிப்பாக மோடி, அமித்ஷா கட்டுப்பாட்டில் தான் பாஜக இன்று வரை இருந்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர பற்றாளராக இருந்த ஜே.பி.நட்டாவை கைக்குள் போட்டுக்கொண்டு அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்குவதாகவும், மோடி பிரதமர் பதவியில் தொடர்வதாகவும் பேசி கட்சியை கைப்பற்றினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதன் பிறகு நட்டா மத்திய அமைச்சராகி விட்டார். தற்போது அவர் 6 வருடங்களை நிறைவு செய்த பிறகும் பாஜகவின் தலைவராக நீடிக்கிறார். பாஜகவின் சட்ட விதிகளின் படி 75 வயது நிறைவு பெற்ற உடன் யாரும் அரசு பதவிகளில் இருக்கக்கூடாது. அதன்படி பாஜகவை தொடங்கிய அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை தூக்கி எறிந்தார்கள்.
இந்நிலையில், நடப்பு ஆண்டு இறுதியுடன் மோடிக்கு 75 வயது நிறைவு பெறுகிறது. அதனால் அவரை அரசு பொறுப்பில் இருந்து விலக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. ஆனால் மோடி, நாட்டை நான் வளமாக வைத்திருக்கிறேன். புதினை மேற்கோள்காட்டி இன்னும் ஒரு 5 ஆண்டுகள் பிரதமராக இருக்கிறேன் என்று சொல்கிறார். இந்த மோதல் தான் தற்போது போய் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் அமித்ஷா மிகவும் உறுதியாக உள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எதாவது பிரச்சினை செய்தால், அமித்ஷா அவர்களை பிடித்து உள்ளே தள்ளிவிடுவார். இதனை அறிந்துகொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது பின்வாங்கி விட்டார்கள்.
மோடிக்கு 75 வயதாகும் போது அவரை மாற்றியாக வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக உள்ளது. இதனால் பாஜக தேசிய தலைவர் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் ஆகிய 2 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காது. இதனால் தங்களுடைய பேச்சை கேட்கக் கூடியவர்களை தலைவராக்க வேண்டும் என 2 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர். அவர்கள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ் ஆகியோரது பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் அதை ஆர்எஸ்எஸ் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சண்டை கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, பாஜக தலைவர் பதவிக்கு பெண்களை கொண்டுவர அமித்ஷா தரப்பில் முயற்சிக்கிறார்கள். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி, வானிதி சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாஜக தேசிய தலைவராகி விட்டால் அவர்களுக்கு குடியரசுத் தலைவர், ஆளுநர் பொறுப்புகள் கிடைத்துவிடும். இவர்கள் மூவரும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசிகள் ஆவர். மோடிக்கு ஆதரவாக குஜராத் தொழிலதிபர்கள் பின்னணியில் உள்ளனர், இவ்வாறு அவர் தெரித்தார்.