இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மீட்கப்பட்டன.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் இம்ரான்கான்,என்பவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது கடையில் வேலை செய்யும் அவினாஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும், கடந்த 6 மாத காலமாக, தினமும் கடையில் வேலை முடித்துச் செல்லும் போது, கடையில் உள்ள துணிகளை திருடி அவர்களது பையில் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும், அவினாஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் கடையில் இருந்த பயோமெட்ரிக் வருகை பதிவேடு இயந்திரத்தை எடுத்து சென்று, அதில் உள்ள பதிவுகளை அழித்து விட்டு, திரும்பவும் பயோமெட்ரிக் இயந்திரத்தை கடையில் வைத்துள்ளனர். இந்த ஊழியர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து துணிகளை மீட்டு தருமாறு இம்ரான்கான், N-1 இராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். N-1 இராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை செய்து, திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த அவினாஷ் (எ) குரு (20), கார்த்திகேயன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.