பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஒருபோதும் விஜய், சீமான் போன்றவர்களுக்கு செல்லாது. அது முழுமையாக திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை நிதியில் கல்லூரிகளை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து சர்ச்சையாகிய நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அறநிலையத் துறையின் நிதியை திமுக அரசு எடுத்து கல்லூரிகளை கட்ட செலவிடுவதாக விமர்சித்துள்ளார். 1963ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பக்தவட்சலம் இருந்தபோது, அறநிலையத்துறையில் இருந்து வரக்கூடிய வருமானத்தில் கல்விப்பணிக்கு செலவிடலாம் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த மாவட்டத்தில் பழனி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் கட்டப்பட்டன. அதற்கு பின்னர் பல்வேறு கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதில் 35 ஆயிரம் மாணவ – மாணவிகள் படிக்கின்றனர். இவற்றில் பார்வையற்றோர் – காது கேளாதோர் பள்ளியும் அடங்கும். எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு அறிவு இல்லாமல் இருக்கின்றார் என்றால்? பழனி கோவிலுக்கு சொந்தமான தொழில்நுட்ப கல்லூரியை அவரே திறந்துவைத்துள்ளார். அதற்கான கல்வெட்டையும் வெளிட்டிருக்கின்றனர்.
கல்விக்கான நிதியில் மட்டும்தான் கல்விக்கூடங்கள் கட்ட வேண்டும் என்கிற விதி உள்ளதா? எடப்பாடி பழனிசாமி கோவிலின் நிதியை எதற்காக இதற்கு பயன் படுத்துகிறார்கள் என்று கேட்கிறார். 2021ல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 கல்லூரிகளை அமைக்க அரசு முற்படுகிறபோது, பார்ப்பனர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் அவர்களை கண்டித்து கல்லூரிகளை கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியவர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் என்கிற தீவிர வள்ளலார் பக்தர் ஆவார். ஆனால் பாஜககாரர்கள், இந்து சமய அறநிலையத் துறையை திமுக உருவாக்கியது என்று நினைக்கின்றனர். அறநிலையத்துறை பணம் யாரிடம் செல்கிறது என்று கேட்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் தான் எடுத்துச்சென்றனர். அவர்களின் சார்பாகதான் கோவிலை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி எனில் கோவிலை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
கல்லூரி கட்டக்கூடாது என்று சொன்னால் அறிவுடையோராக மாறக்கூடாது என்பது தானே அர்த்தமாகும். இது யாருடைய குரல்? அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவருக்கு அண்ணாவின் கொள்கைகள் என்ன என்று தெரியாது. அப்போது எம்ஜிஆர் – ஜெயலலிதா குறித்து பேச வேண்டும். அவர்கள் அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனரா? இது முழுக்க முழுக்க பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்பதைதான் காட்டுகிறது. கடலூரில் ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில் வடநாட்டவர்கள் அதிகளவில் அரசுப்பணிகளில் நியமிக்கப்பட்டனர். திமுகவில் வாரிசு அரசியல் உள்ளதாக எடப்பாடி சொல்கிறார். மிதுன் பழனிசாமியை பிடித்து விட்டார்கள் என்பதால் தானே எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணிக்கு சென்றார். மிதுன் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், மறைமுகமாக அவர் கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டார். இது அனைவருக்கும் தெரியும். ஓபிஎஸ் மகன், ஜெயக்குமார் மகன் போன்றவர்கள் எல்லாம் வாரிசு அரசியல் கிடையாதா?
கோவில் நிதியில் முறைகேடு நடைபெற்றது உண்மை என்றால் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். சும்மா போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது. தமிழ்நாட்டில் தற்போது நான்கு முனை போட்டி நடைபெற உள்ளது. திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் கட்சியால் சிதறடிக்கப்பட போகிறது. அப்படி சிதறடிக்கப்படும் போது, சாதாரண குழந்தைகளுக்குக் கூட தெரியும் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று. தன்னுடைய கட்சியை பலப்படுத்துவதற்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தி விட்டார். தன்னைவிட்டு பிரிந்து சென்றவர்கள், தன்னால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் போன்றவர்களை ஒருங்கிணைத்திருந்தாலே அதிமுகவின் வலிமை உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தன்னுடைய நாற்காலியை யாராவது பறித்துவிடுவார்களோ என்கிற பயம். பொதுச்செயலாளராக நீடிக்க முடியாதோ என்கிற அச்சம் உள்ளது. அப்போது அனைவரையும் ஒன்றிணைக்க அவரிடம் சக்தி கிடையாது.
பாஜக எதிர்ப்பு வாக்குகள், நாம் தமிழர் கட்சிக்கு ஒருபோதும் போகாது. ஏனென்றால் அவர் பெரியார் குறித்து அவதூறுகளை முன்வைத்தவர். பாஜகவின் அரசியலை கொல்லைப்புற வழியாக செய்துகொண்டிருக்கிறார். அதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஒருபோதும் அவருக்கு கிடைக்காது. பாஜகவை மென்மையாகவும், செலக்டிவ் ஆகவும் பேசக்கூடிய விஜயை, பாஜக எதிர்ப்பாளர்கள் யாரும் நம்பிக்கைக்கு உரிய நபராக பார்க்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியபோதே அவர் பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்காதவர். மோடி எதிராக பேசாதவர். பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கி என்பது ஒன்று கூட இவர்கள் மூவருக்கும் வராது. திமுகவுக்கு மட்டும்தான் அந்த வாக்குகள் வரும். திமுக கூட்டணி ஒரு வலிமையான எதிரியோடு மோதுகிறது. சமூக நல்லிணக்கத்திற்கு யார் எதிரியாக இருக்கிறார்கள்? யார் மதவெறியை தூண்டிவிட்டு சமூகத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எதிரான அணி என்று ஒரு கொள்கையுடன் நீண்ட நாட்களாக பயணம் செய்கிறார்கள். திமுகவில் கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மிக நீண்ட நாட்கள் பயணப்பட்டுள்ளன. அதனால் மக்களின் நம்பிக்கை திடீர் அரசியல்வாதிகள் மீது வராது.
பரபரப்புக்காகவோ, கனவத்தை ஈர்ப்பதற்காகவோ எதையாவது பேசுவது என்பது பழனிசாமி எந்த கட்சியை சேர்ந்தவர். அவர் அதிமுககாரரா? அல்லது பாஜககாரரா? அவர் யாருடன் கூட்டணியில் இருக்கிறார்? அவருக்கு நிரந்தர கொள்கை இருக்கிறதா? கோட்பாடு இருக்கிறதா? அவருக்கு எதாவது ஒன்று உள்ளதா? சம்பந்தியின் மீது வழக்கு தொடர்ந்தனர். கட்சியை காப்பாற்ற முடியாத நிலையில் இருந்ததால் கூட்டணிக்கு போயிருக்கிறார். அதற்கு என்ன சாட்சி என்ன என்றால்? திடீரென விசிகவை கூப்பிட்டிருக்கிறார். இடதுசாரிகள் குறித்து விமர்சனத்தை முன்வைக்கிறார். அவர்களுக்காக கூட்டணி கதவுகளை திறந்துவைத்தபோதும் அவர்கள் வரவில்லை. எதுவும் நடைபெறவில்லை என்பதால் தான் பாஜகவிடம் சென்று சரணடைந்தார். அப்படி செய்வதால் பாஜக பலமடையுமே தவிர, அதிமுக பலமடையாது. அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியை பாஜக என்கிற கட்சி விழுங்கப் போகிறது என்பதால் தான் அக்கட்சியின் மூத்த தலைவரான அன்வர்ராஜா விமர்சிக்கிறார். அந்த நிலையை எடப்பாடி பழனிசாமி அடைந்துவிடக்கூடாது என்கிற ஆதங்கம் தான் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.