spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசேட்டை செய்யும் விஜய்! கோட்டை விடும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

சேட்டை செய்யும் விஜய்! கோட்டை விடும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க பாடுவோம் என்று அண்ணாமலை சொல்கிற நிலையில், அது குறித்து அமித்ஷா ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

ராகுல்காந்தி யாத்திரை, தவெக மாநாடு மற்றும் முதலமைச்சர் குறித்த விஜய் முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகாரில் நடைபெறும் ராகுல்காந்தியின் யாத்திரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து பேசவே கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது.  அது ஜனநாயகத்தை நசுக்குகிற வேலை என்று சொல்கிறோம். வாக்கு திருட்டு மோசடி தொடர்பாக ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துவிட்டு, தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை குலைக்கும் விதமாக குற்றம் சாட்டுகிறீர்கள் என்று சொல்லலாம். ஆனால் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பை நடத்தி முடித்த உடன், நீங்கள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுங்கள். இல்லாவிட்டால் 3 வருடம் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மிரட்டுகிறீர்கள்.

எதையோ சொல்லி இந்த விவகாரத்தை யாரும் கிளப்பாதீர்கள் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறபோது தான், இதனை சாதாரணமாக விடக்கூடாது என்று இந்தியா கூட்டணி கட்சிகள் பிடித்துக்கொண்டன. ஆளுங்கட்சி செய்கிற தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்கிற கடமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. அதனால் தான் பீகாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். அதில் ஒருநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கிறார். இது பீகாருக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு அடையாளமாக பார்க்கிறேன். ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த பயணம் உதவினால் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவேன்.

130வது சட்டத்திருத்தம் மூலம் முதலமைச்சர், அமைச்சர்களின் பதவியை பறிக்கும் விதமாக மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. எதிர்க்கட்சிகள் எதற்காக பயப்படுகின்றன. மத்திய அரசு எதற்கு எடுத்தாலும் அமலாக்கத்துறையை அனுப்பி கைது செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் குற்றம் நிரூபணம் ஆகவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் பல மாதங்கள் சிறையில் உள்ளனர். தங்களுக்கு பயம் இல்லாததால் இந்த சட்டத்தில் பிரதமரையே சேர்த்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். நாட்டின் பிரதமர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியுமா? பிரதமரை எந்த காலத்தில், எந்த சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்? மத்திய அமைச்சர்கள் மீதே வழக்கு தொடர முடியாது. ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுதான் வழக்குப்பதிவு செய்ய முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சரை கைதுசெய்து சிறையில் போடுவீர்கள். ஒரு வேளை வழக்கில் கைதான நபர் விடுதலையாகிவிட்டார் என்றால் அவருக்கு ஏற்பட்ட இழப்பை யார் சரிசெய்வது? அதனால் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் 3 சட்டங்களும் ஜனநாயக விரோதமானவைதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

நெல்லையில் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அமித்ஷா ராகுலை பிரதமராக்குவது சோனியாவின் கனவு என்றும், உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவது ஸ்டாலினின் கனவு என்றும், இது ஒருபோதும் நடக்காது சொல்கிறார். 2026 தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். வாரிசு அரசியல் என்று பாஜக குற்றம்சாட்டிய பிறகுதான் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்று ராகுல்காந்தி ஆகும் அளவுக்கு மக்கள் வெற்றிபெற வைத்தனர். வாரிசு அரசியல் என்று சொன்ன பிறகுதான் உதயநிதியை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற வைத்தார்கள். சரி பாஜகவில் வாரிசு அரசியலே கிடையாதா? மத்திய அமைச்சர்களின் உறவினர்கள் எத்தனை பேர் பல்வேறு பதவிகளில் உள்ளனர்? பாஜகவை சேர்ந்த அமைச்சரின் மகனே, மகளோ தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அவர்களை அந்த மக்கள் தேர்வு செய்கிறார்கள். அதை மக்கள் முடிவு செய்யட்டும். அமித்ஷா மீண்டும் கூட்டணி ஆட்சி என்று சொல்லியிருக்கும் நிலையில் அதற்கு எட்ப்பாடி என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார் என்று பார்க்க வேண்டும். அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க பாடுவோம் என்று சொல்கிறார். ஆனால் மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா இதுவரை ஒரு வார்த்தை சொல்லவில்லை ஏன்?

தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஜய், ஸ்டாலின் அங்கிள் என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. அப்படி அங்கிள் என்று விஜய் பேசியதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் விஜயின் தந்தை கலைஞருக்கு நெருக்கமானவர். ஒருவேளை ஸ்டாலினை அவர் அப்படி அழைத்திருக்கக் கூடலாம். எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரை நீ.. வா.. போ.. என்று ஒருமையில் பேசுகிறார். அவருக்கு எதிராக திமுகவினர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ராமதாஸ், அதேபோன்று ஒரு அவமரியாதையான வார்த்தையை தான் பயன்படுத்தினார். வயதில் மூத்தவரோ, இளையவரோ, ஸ்டாலினை பிடிக்கிறதோ, இல்லையோ அவர் நமக்கான முதலமைச்சர். அவருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். ராமதாஸ் விமர்சித்தபோது, அவரது வயது காரணமாக அதை திமுகவினர் கடந்து சென்றார்கள். ஆனால் எவ்வளவு வயதாகினாலும் பதவியில் இருக்கும் முதலமைச்சரை ஒருமையில் பேசுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அமைச்சர் கே.என்.நேரு சொல்வது போன்று, அது அவர்களுடைய தராதரத்தை காட்டுகிறது என்று சொல்லலாம்.  விஜய் அங்கிள் என்று சொன்னது, நையாண்டியாக கூட இருக்கலாம். அதற்கு திமுகவினர் அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்கலாம். விஜய், பொதுவெளியில் நாம் நடந்துகொள்கிறோம். மக்கள் நம்மை கவனிக்கிறார்கள் என்கிற புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும்.

விஜய் இதுவரை திமுகவை மட்டுமே விமர்சித்த நிலையில், தற்போது அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கிவிட்டார். அதிமுகவை ஊழல் கட்சி. தகுதியற்றவர்கள் கையில் கட்சி உள்ளது என்று சொல்லிவிட்டார். தாங்கள் செய்த ஊழலுக்கு பயந்து பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டார்கள் என்று, இவை எல்லாம் எடப்பாடி பழனிசாமியை மையப்படுத்திய விமர்சனங்கள். அதையே வெளிப்படையாக சொல்லாமல் அதிமுக தொண்டர்களை குறிவைத்து வலையை வீசிவிட்டார். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக எம்ஜிஆரை தனக்கு பிடிக்கும் என்று கொக்கியை போட்டுவிட்டார். நான் இருக்கிறேன் வாங்க என்று ஒரு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார். நாடறிந்த பிரபலம் ஒருவர் நமது வீட்டை நோக்கி படையெடுத்து வருகிறார் என்றால் நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறைந்தபட்ச தற்காப்பு நடவடிக்கையை செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு பிரம்மாண்டமான கட்சி நமது கூட்டணிக்கு வரப் போகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தது விஜய் கட்சியை தான். தற்போது விஜய் அதற்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார். ஒன்றுபட்ட அதிமுக குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட ஆணவத்திற்கோ, சுய பாதுகாப்பு இன்மை இன்னும் தொடருவதாக இருந்தால் அவர் கட்சியின் தலைவராக இருப்பதற்கே தகுதியில்லை. சட்டரீதியாக கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளபோது அவர் எதற்காக பயப்பட வேண்டும். கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் தயங்கினால் அவரை இடத்திற்கு கொண்டுவர வேண்டிய கடமை இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ