ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரத்தில், அந்த கருவி லண்டனில் வாங்கியது என தெரியவந்துள்ளது. இதனால் அண்மையில் லண்டனுக்கு சென்றுவந்த தமிழக அரசியல் தலைவர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணி குறித் மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கருவி லண்டனில் உள்ள ஒரு மாலில் வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மாதங்கள் வரை அந்த கருவி செயல்படும். ராமதாஸ் அரசியல் ரீதியாகவும் யாரை சந்தித்தாலும், தன்னுடைய குடும்பத்தை சாராதவர்கள் யாராக இருந்தாலும் அந்த இடத்தில்தான் உட்கார்ந்து பேசுவார். குறிப்பிட்ட நாற்காலியில் தான் அமர்வார். இந்த விவரங்கள் எல்லாம் யாருக்கு தெரிந்திருக்கும்? தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லாதவர்களுக்கோ, அங்கே இருக்காதவர்களுக்கோ தெரிந்திருக்காது. வெளியாட்கள் போய் வைத்தாலும், அவர் வழக்கமாக அங்கே தான் அமர்ந்து பேசுவார் என்று தெரியாது. அது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இது தெரியும். அப்படி எனில் ராமதாஸ் குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவர்தான் அந்த ஒட்டுக்கேட்பு கருவியை வைத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ராமதாசுக்கு, அன்புமணி மீது சந்தேகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் நேரடியாக வைத்திருப்பாரா என்றால்? அவர் வைக்க சொல்லி வைத்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
அன்புமணி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராமதாசுடன் கட்சி விவகாரங்கள், அரசியல் என பல்லாண்டுகளாக பேசியும், ஆலோசனைகளை பெற்றும் வந்தவர் அன்புமணி. அவருக்கு தனது தந்தை எந்த நேரத்தில், என்ன முடிவை எடுப்பார் என்று தெரியாதா? அதை ரெக்கார்ட் செய்ய வேண்டிய அவசியம் என்ன உள்ளது? அந்த அளவுக்கு புரிதல் இல்லாதவரா அன்புமணி. ஆடிட்டர் குருமூர்த்தி செல்கிறபோது, அவரும், ராமதாசும் பேசியதை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு சந்தேகம் எழுகிறது. அண்மையில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சென்று வந்துள்ளார். அதனால் அவர் மீதும் சந்தேகம் எழலாம். அதற்கு வாய்ப்புகளும் உள்ளன. காவல்துறைக்கும் அந்த சந்தேகம் இருக்கும்.
மருத்துவர் ராமதாசே கூட்டணி பேச்சுவார்த்தையின்போது அண்ணாமலை தைலாபுரம் தோட்டத்திற்கு வந்ததாக சொல்கிறார். அண்ணாமலை ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவர் மீது நாம் குற்றம்சாட்ட முடியாது. இந்தாலும் அந்த ஒட்டுக்கேட்பு கருவி லண்டனில் வாங்கியதற்கான ரசீதுகள் இருக்கின்றன. ஏனென்றால் கே.டி.ராகவன் போன்றவர்களின் வீடியோ வெளியான விவகாரத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பு உள்ளதாகவும் நம்பப்படுகிறது. அப்படி பாஜகவினர் அதை வைத்திருந்தாலும், அதனால் எந்த பலனும் இருக்காது என்று மக்கள் கருதுகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளில் கம்யூனிஸ்ட்களை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, மறுநாள் அவர்கள் கூட்டணிக்கு வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பேன் என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது. ஜெயலலிதா மறைவின்போதே பாஜகவினர் கட்சியை கைப்பற்றிவிட்டார்கள். ஸ்டாலினின் அப்பா முதலமைச்சராக இருந்தார். ஆனால் நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். என்னுடைய பேருந்தை சுந்தரா டிராவல்ஸ் என்று சொல்கிறார். என்னிடம் வசதி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துள்ளார். பெரிய கட்சி தன்னுடன் கூட்டணிக்கு வரும் என்று சொல்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தமிழ்நாட்டு மக்கள் தேர்வு செய்யவில்லை. மக்கள் விருப்பத்திற்கு எதிராக முதலமைச்சர் பதவியை அடைந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதால், அவருக்கு எந்த விவரமும் தெரியவில்லை. அமெரிக்காவில் பபலோ என்பது ஒரு இடமாகும். எடப்பாடி பழனிசாமி, பபலோ என்பது எருமைமாடு என்று சொல்கிறார். 65 லிட்டர் பால் கறந்தால் அந்த மாடு இறந்தே போய்விடும். 6 லிட்டர் கொடுத்தாலே மாடு மூச்சுவாங்க தொடங்கிவிடும். அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்கிறார். மாடு 65 லிட்டர் பால் கறக்கும் என்றும் சொல்கிறார். பாஜகவினரின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து எடப்பாடி பழனிசாமி தெறித்து ஓடுகிறார். அப்படி அவர் எங்கே செல்கிறார் என்றால் மேட்டுப்பாளையம் வனப்பத்திர காளியம்மன் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். கொஞ்சம் மலை ஏறினால் கர்நாடகா வந்துவிடும். தமிழகத்தின் எல்லைக்கே சென்று அங்கிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.