அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தன்னை சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், பாஜகவில் சேர்ந்துவிடும் சிந்தனைக்கு ஓபிஎஸ் வந்துவிட்டார் என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகை, அதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட போகும் மாற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல் அளித்துள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வருகிறார். பின்னர் திருச்சி விமான நிலையம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. அதேவேளையில், பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. எனவே அவர் பிரதமரை சந்திக்க மாட்டார் என்றும் சொல்லப்பட்டது. எனினும் தற்போது அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க பாமகவில் மிகப்பெரிய குழப்பம் வெடித்துள்ளது. பிரதமர் மோடிக்கு, அதிமுக – பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்று ஒரு கருத்து உள்ளது.

அப்படி என்றால் அமித்ஷா ஏன் அவசர அவசரமாக வந்து கூட்டணியை உறுதிசெய்து விட்டு சென்றார் என்கிற கேள்வி எழும். அண்ணாமலையை மாற்றினால் தான் பாஜக உடன் கூட்டணி என்று அதிமுகவில் கோரிக்கை எழுந்தது அனைவருக்கும் தெரியும். அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு சென்று, அமித்ஷாவை சந்தித்தார். பாஜக தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவையோ, பிரதமர் மோடியையோ சந்திக்காத எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை ஏன் சந்தித்தார்? அவர் புறப்பட்டு செல்வதற்குள்ளாக அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் டிவிட் செய்தார். அப்போதே அதிமுக – பாஜக இடையே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதற்கு பிறகு அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு வந்தார்.
அமித்ஷாவிடம், எடப்பாடி பழனிசாமி 3 கோரிக்கைகளை வைத்தார். அதில் முதலாவது அண்ணாமலை, மாநில பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். மற்ற 2 கோரிக்கைகள் ஓபிஎஸ், தினகரனை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்பதாகும். இந்த கோரிக்கையை அமித்ஷா ஏற்றுக்கொள்வதற்கும் காரணம் உள்ளது. பாஜகவில் 75 வயது நிறைவு பெற்றவர்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அழுத்தம் கொடுக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் தாண்டி மோடி ஒரு பெரிய பிம்பமாக எழுந்து நிற்கிறார் என்கிறபோது, 75 வயதாகி விட்டதால் அவரை பதவியில் இருந்து விலக ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது. அதன்படி பிரதமர் மோடி பதவி விலகுகிறார். அல்லது 2029 தேர்தல் வரை பொறுப்பில் நீடிக்கிறார் என்கிறபோது, 2029 தேர்தலுக்கான வேட்பாளரை யார் என்று தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு பாஜக வந்துவிட்டது.
இந்த போட்டியில் நிதின் கட்கரி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடையே போட்டி வந்தது. இதில் உடல்நிலை காரணமாக நிதின் கட்கரி விலகிவிட்டார். தற்போது அமித்ஷா – யோகி இடையே மோதல் நடைபெறுகிறது. தற்போது யோகி ஆதித்ய நாத்திற்கு வடஇந்தியாவில் சற்று செல்வாக்கு உள்ளது. அதனால் அமித்ஷாவுக்கு தென்னிந்தியாவில் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. 2029ல் அதிமுக கூட்டணியோடு இருந்தால்தான் கணிசமான எம்.பி-க்களை வெல்ல முடியும் என்று அமித்ஷா நம்புகிறார். அதன் காரணமாக அதிமுக சொல்கிற கண்டிஷன்களை ஏற்றுக்கொள்ள அமித்ஷா ஒப்புக்கொள்கிறார்.
அதற்கு பிறகு அமித்ஷா சென்னை வருகிறார். கூட்டணி என்கிற இடத்திற்கு அவர்கள் போகிறார்கள். எடப்பாடி அந்த கண்டிஷன் போட்ட காரணத்தால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை அங்கு அழைக்க முடியவில்லை. இவர்களை விட்டுவிட்டு அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த வாசன், கிருஷ்ணசாமி, பாரிவேந்தர் போன்றவர்களை அழைத்தால் கூட்டணி பலவீனப்பட்டுவிட்டதாக தெரிவித்துவிடும். எனவே அவர்களை கூப்பிடாவிட்டால் வேறு யாரையும் கூப்பிட வேண்டாம் என்றுதான் கூட்டணி அறிவிப்பின்போது பேனர்கள் மாற்றப்பட்டன. அதிமுக – பாஜக மட்டும் கூட்டணி அறிவித்தனர். ஆனால் இந்த கூட்டணியில் மோடிக்கு உடன்பாடு கிடையாது. தற்போது ஓபிஎஸ் தரப்பில் பிரதமர் மோடியை அணுகுகிறார்கள். மோடியை எப்படியாவது பார்த்துவிட்டால், நாம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தி விடலாம் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். அதுதான் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதமாகும்.
எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்கவில்லை என்பது நேற்று முதல் பெரும் விவாதமானது. இதனால் எடப்பாடி பழனிசாமியும், மோடியை சந்திக்கும் முயற்சியில் இன்று இறங்குகிறார். எடப்பாடி பழனிசாமி எப்படியும், தன்னை அதிமுகவில் சேர்க்க மாட்டார் என்பதால், ஒபிஎஸ் பாஜகவில் இணையும் முடிவுக்கு வந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுகிற பாஜகவுக்கு நாம் சென்றால் என்ன தவறு என்று ஓபிஎஸ் சிந்திக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. எனவே ஓபிஎஸ் பாஜகவில் சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பாமகவின் பெயர், கொடி, சின்னம் முதலியவற்றை தன்னுடைய அனுமதி இல்லாமல் அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர் ராமதாஸ் சொல்லிவிட்டார். ஏனென்றால் நான் தான் கட்சியின் தலைவர் என்று சொல்கிறார். அன்புமணி, தமிழகம் முழுவதும் நடைபயணம் போகலாம் என்று கிளம்பினார். ராமதாஸ், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதிவிட்டார். தன்னுடைய கட்சி பெயர், சின்னம் போன்றவற்றை பயன்படுத்தி அன்புமணி பிரச்சார செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தன்னுடைய கடிதத்தில் சொல்லியுள்ளார். அதனால் அன்புமணியின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக அன்புமணியின் சுற்றுப்பயணத்திற்கு டிஜிபி அனுமதி தரவில்லை.
இந்த சூழலில் மருத்துவர் ராமதாசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கலைஞருடன், ராமதாஸ் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக பாஜகவை கடுமையாக ராமதாஸ் விமர்சித்து வருகிறார். இந்த தருணத்தில் பாமகவும், திமுகவும் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று செய்திகள் வருகின்றன. அண்மையில் ராமதாஸ், திருமாவளவனை பாராட்டினார். பதிலுக்கு திருமாவளவனும், ராமதாசை பாராட்டி இருந்தார். என்னுடைய பார்வையில் இதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆனால் அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில், இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார். அவர் சிறப்பான ஆட்சியை புரிகிறார் என்று வடஇந்திய ஊடகம் பாராட்டுகிறது. அதேவேளையில் பாஜக – அதிமுக கூட்டணி சிதறு தேங்காய் போன்று சிதறி கொண்டிருக்கிறது. இவை திமுகவுக்கு நேர்மறையான ஒரு வாய்ப்பை கொடுக்கும் என்பதே கள எதார்த்தமாக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.