நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய லைன்-அப் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையின் மூலம் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர் சிவகார்த்திகேயன். இவர் ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தன்னுடைய புதிய படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி நடைபோட்டு வருகிறது. இதற்கிடையில் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி பேசியுள்ளார். அதன்படி, “நான் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் பணிபுரிய இருக்கிறேன். படம் எப்படி வெளிவருகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட். அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு சாரின் படம். மேலும் புஷ்கர்- காயத்ரி டைரக்ஷனில் நடிக்கும் படம் இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. என்னுடைய லைன்-அப் குறித்து நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.