வியட்நாம் போரில் மரணம் அடைந்த அமெரிக்கா வீரர்களின் பெயர்களை வாஷிங்டனில் ஒரு சுவற்றில் பொரித்து வைத்திருப்பார்கள் அதுபோல் மிகப்பெரிய மரியாதையை மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்படும் என அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில் குமார், சுகாதாரத்துறை இயக்குனர் வினிஷ், அப்பல்லோ மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்,

அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்ததற்கு நன்றி. அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக படைத்துக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பரந்து விருந்த மருத்துவ சேவையை அளித்து வருகிறது.
அரசு மருத்துவ சேவைகள் அரசின் உதவியோடு ஏழை மக்களுக்கு அப்பல்லோ மருத்துவர் சேவைகள் கிடைப்பதற்கு முதலமைச்சரின் மருத்துவ திட்டத்தின் வாயிலாக தொடர்ந்து கிடைத்துக் கொண்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 2009 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசின் மருத்துவத்துறை சேர்ந்த அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஒன்றிய அளவில் செய்ய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் இதை எப்படி நீங்கள் செயல்படுத்துகிறீர்கள் என்பதை கண்காணிக்கிறோம் என்று ஆராய்ந்து சென்றனர்.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரதமர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். டெல்லியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் நடத்தப்படும் கூட்டத்தில் ஒரு முறை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து இந்தியாவில் உள்ள மற்ற மாநில மருத்துவர் அமைச்சர்கள் அதிகாரிகள் முன்னிலையில் விளக்கம் அளிக்க சொன்னார்.
மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் தமிழ்நாட்டில் எந்த வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று விரிவான விளக்கம் அளித்தோம். தமிழக முதலமைச்சர் அவர்களால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஏறத்தாழ இரண்டரை கோடி பயனாளர்களை சென்றடைந்துள்ளது.
இந்தியா முழுவதும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போல் நடைமுறைக்கு கொண்டு வர விரும்புவதாக ஒன்றியம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்தார். இன்னுயிர் காப்போம் 48 என்ற திட்டம் குறித்தும் இதன் செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து ஒன்றிய அரசு அந்தத் திட்டத்தை பின்பற்றி செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு கோடியே 47 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் வரை இந்த உறுப்பு அறுவை சிகிச்சை திட்ட மூலம் பயன் பெற்று வருகிறார்கள். கல்லீரல், சிறுநீரகம், கண் கருவிழி, எலும்பு மஜ்ஜை,தோல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு 20 லட்சம் வரையிலும் கூட இந்த காப்பீடு திட்டம் மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.
கடந்த ஆட்சியாளர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திய போது ஓராண்டுக்கு குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் என்ற அளவிற்கு இருந்தது. இதை தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு ஒரு லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்த முடியும் என்று அறிவித்தார்.
இதற்கு முன்பு இதற்கான ப்ரீமியம் தொகை 699 ரூபாய், இந்த அரசு 849 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இதற்கு முன்பு 1450 சிகிச்சை முறைகளுக்கு இந்த காப்பீடு திட்டங்களில் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2053 என்ற வகை அளவில் சிகிச்சைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
தேவைகள் அதிகரித்து வருவதால் வெறும் 940 தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளில் இந்த காப்பீடு திட்டம் பயன்பாட்டில் இருந்தது இப்போது தமிழ்நாட்டில் 2231 மருத்துவமனைகளில் இந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
964 அரசு மருத்துவமனைகளிலும் 1267 தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் பயன்பாட்டில் உள்ளது. 2021 டிசம்பர் 18 ஆம் தேதி இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் காரணமாக 4 லட்சத்தி 29 ஆயிரத்து 479 பேர் விபத்தில் சிக்கியவர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்காக இந்த அரசு 397 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. 4 லட்சத்து 29 ஆயிரத்து 479 பேர் பயன்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். அதிகமாக அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 723 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் அரசு மருத்துவமனைகள் 250 அப்பல்லோ உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகள் 473 என்ற அளவில் செயல்பாட்டில் உள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பு அரசு நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது. 102 வயது நிரம்பிய மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர் மிகப் பெரிய கம்யூனிச தலைவர் உடல்நல குறைவு காரணமாக நல்ல கண்ணு அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அரசு மருத்துவர்கள் அளித்து வரும் சேவையை கண்காணிப்பது மற்ற மருத்துவரின் கருத்தை கேட்பது சரியாக இருக்கும் என்ற வகையில் அப்பல்லோ மருத்துவர்கள் 4 பேர் உடனடியாக வந்து மிகச் சிறப்பாக அரசு மருத்துவர்கள் மருத்துவம் அளித்து வருகிறார்கள். என்று சொன்னது மட்டும் இல்லாமல் அவர்களும் சில யோசனைகளை சொன்னார்கள். அரசும் தனியார் மருத்துவ சேவைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் காரணத்தால் தமிழ்நாட்டில் பெரும் பகுதியான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவ நிர்வாகத்தில் பணியாற்றுபவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் தனியார் மருத்துவமனைகள் காத்திருந்து அவர்களை அழைத்துச் செல்கிறார்கள். பெரிய மருத்துவமனைகளில் சிறப்பாக மருத்துவம் செய்யும் மருத்துவர்களின் சேவையை அரசு நிர்வாகமும் பெற்றுக் கொள்வது இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளோம். அரசு மருத்துவமனைகளோடு இணைந்து குழந்தைகளின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு சேவையாற்றி வருகிறது.
தமிழக மக்களின் மருத்துவ சேவைக்கு மிகப்பெரிய அளவிலான பங்கை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்ந்து ஆற்றி வருகின்றன. 268 மூளை சாவு அடைந்த நபர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளது. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் ஒரே ஆண்டில் 200க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் செய்திருப்பது தமிழகத்தில் தான். 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஒரு செய்தி அறிவித்தார் இனிமேல் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று அறிவித்தார்.
அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் 513 பேர் உடல் உறுப்பு தானங்களை செய்து இருக்கிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் சார்ந்த அதிகாரிகள் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்வதற்கு குறித்து எப்படி செயல்படுத்துகிறீர்கள் என்று கேட்டறிந்து சென்றிருக்கிறார்கள்.
இந்த மாத இறுதியில் கூட தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தல் படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் எத்தனை பேர் உறுப்பு தானம் செய்திருக்கிறார்களோ அவர்களின் பெயர்களை அரசு மருத்துவமனைகளில் நீண்ட சுவர் எழுப்பி அவர்களின் பெயர்களை பதிய வைக்கும் முயற்சியை மேற்கொள்ள உள்ளோம்.
வியட்நாம் போரில் மரணம் அடைந்த அமெரிக்கா வீரர்களின் பெயர்களை வாஷிங்டனில் ஒரு சுவற்றில் பொரித்து வைத்திருப்பார்கள் அதுபோல் மிகப்பெரிய மரியாதையை மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்படும். பல்வேறு முயற்சிகளை அரசாங்கமும் தனியார் மருத்துவமனைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் பல்வேறு உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது இது தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.