spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆட்டம் போட்ட அரசியல் வாரிசுகள்! நேபாள் புரட்சிக்கு வித்திட்ட ஆடம்பரம்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

ஆட்டம் போட்ட அரசியல் வாரிசுகள்! நேபாள் புரட்சிக்கு வித்திட்ட ஆடம்பரம்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

-

- Advertisement -

நேபாளத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை முறை, சக இளைஞர்களிடம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், எனவே அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நேபாளத்தில் நடைபெற்று வரும் GEN Z தலைமுறையினரின் போராட்டத்தின் பின்னணி குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. நமது அண்டை நாடான நேபாளத்தில் நடைபெறும் அரசியல் குழப்பங்களை நாம் சரியாக கவனிக்காவிட்டால், அங்கிருந்து இந்தியாவுக்கு ஏராளமானோர் அகதிகளாக வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. நேபாளம் என்பது இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையில் உள்ள நாடு. நேபாளத்தில் பிரச்சினை பெரிதாகி, அங்கு ஸ்திரத்தன்மையை சீனா ஏற்படுத்துகிறேன் என்று சொன்னால், அது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே நேபாளத்தில் நடைபெறுகிற நிகழ்வுகளை இந்தியாவும் உற்று நோக்கும். அங்கு நடைபெறும் நிகழ்வுகளை நாமும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்

நேபாள அரசு சமூக வலைதளங்களுக்கு முழுமையாக தடை விதித்ததால், இளைஞர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாயில்கள் அடைக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இளைஞர்கள் வெளியே வந்தனர். ஏற்கனவே இளம் தலைமுறையினர் அரசின் ஊழல்கள் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்து வந்தனர். நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளாக லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. தங்களுடன் படிக்கும் சக மாணவ – மாணவிகள் ஆடம்பரமாக உடைகளை உடுத்துகின்றனர். ஆனால், அரசுடைய சம்பளம் அமைச்சர்களுக்கோ, அதிகார பொறுப்புகளில் உள்ளவர்களுக்கோ கிடையாது. அப்போது மக்களுடைய பணத்தை கொள்ளையடித்து தான் அவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக இளைஞர்கள் நினைக்கின்றனர். அப்படி போராட வந்தவர்கள் எல்லாம், ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் கிடையாது. போராட்டத்தை வழிநடத்த முறையான தலைமை இல்லாததால் போராட்டக்கார்கள், தங்களுடைய ஆத்திரத்தை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினார்கள். அப்படியாக ஓரிடத்தில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்றனர். மறுபுறம் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீவைப்பில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க செய்திகளாகும்.

இத்தகைய சூழலில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ராணுவம் வழங்கிய ஆலோசனையின் பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், அவரை பாதுகாப்பான இடத்திற்கு ராணுவம் கொண்டு சென்றுவிட்டது. பிரதமர் பதவி விலகியது என்பது போராட்டக்கார்களின் கோரிக்கைகள் ஏற்கபடுவதற்கான ஒரு சமிக்ஞை ஆகும். எனவே போராட்டக்கார்கள் அதற்கு மேலாக எந்த வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஒரு பெண் எரித்துக் கொல்லப்படுகிற அளவுக்கு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அது, எந்த ஒரு காரணத்திற்காக செய்திருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள்தான்.

எனவே GEN Z இளைஞர்கள், அப்படிபட்ட போராட்டத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். மேற்கொண்டு வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்றும் சொல்ல வேண்டும். தற்போது Z ஜெனரேஷன் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் போராட்டத்தை நிறுத்த சொல்லிவிட்டோம். அதன் பிறகு வேறு யாரோ வன்முறையில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள். நேபாளத்தில் இளைஞர்கள் வன்முறை என்பது எந்தவித தார்மீக காரணங்களும் இல்லாமல் நடத்தியவையாகும். இன்னும் பல இடங்களில் வன்முன்றைகள் நடைபெற்று வருகிறது. ராணுவம் அதனை தடுத்து நிறுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று நம்புவோம்.

அதேவேளையில் GEN Z இளைஞர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் நியாயமானவை ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் ஊழல் செய்து அரசியல்வாதிகள் சேர்த்த பணம் பறிக்கப்பட வேண்டும். பிரதமர் ராஜினாமா செய்தது மட்டும் போதாது.. நாடாளுமன்றத்தையே கலைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அதற்கான சாத்தியம் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்கிறபோது, நாடாளுமன்றம் கலைக்கப்படும். அடுத்தபடியாக நேபாள அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனறு கோரிக்கை எழுந்துள்ளது. எந்த ஒரு நாட்டிலும், மக்கள் தங்களின் சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்படுவதாக உணர்கிறார்களோ, அங்கே அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்படும்.

ஆனால் இவை எல்லாம் எப்போது தேவைப்படும் என்றால், வன்முறை சம்பவங்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உடன், போராடிய இளம் தலைமுறையினரை கூப்பிட்டு பேசுகிற நிலை ஏற்படும். அதற்குள்ளாக இளைஞர்கள் மத்தியில் ஒரு தலைமை ஏற்பட வேண்டும். அந்த தலைமை வாயிலாக தங்கள் தரப்பு கருத்துக்களை வலுவாக அரசிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். அப்படி ஏற்படாவிட்டால், போராட்டக்காரர்கள் இடையே ஒருமித்த கருத்து வராது.  ஒற்றுமை இல்லாவிட்டால் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. தற்போதைய உடனடி தேவை என்பது போராடும் இளைஞர்கள் ஒரு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தி, தங்களுடைய கோரிக்கைகளை நடைமுறைப் படுத்தக் கூடியவையாக மாற்ற வேண்டும். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு உரிய காலக்கெடு வழங்கிட வேண்டும்.

நேபாளத்தில் இன்றைக்கு இருக்கிற சூழலில் அங்கு எம்.பி. ஆக இருக்கும் யாரும் தங்களுடைய பதவியில் தொடர முடியாது. அரசில் உள்ளவர்கள் தவறு செய்யவும் கூடாது. அப்படி செய்துவிட்டு தங்களை யார் கேள்வி கேட்க முடியாது என்றும் நினைக்கக்கூடாது. இந்த தவறுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நேபாளத்தில் சமூக ஊடங்களுக்கு தடை விதிக்கப்பட்ட உடன் நடைபெற்றது புரட்சி அலைதான். அதன் காரணமாக நாடாளுமன்றத்திற்கு தீவைத்தது என நடக்கக்கூடாத சம்பவங்கள் நடைபெற்றன. இவற்றுக்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்பை இன்னும் அதிகமாக உணர வேண்டும். மக்கள் அமைதியாக இருப்பார்கள். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று நினைக்கக்கூடாது.

நேபாளத்தில் லஞ்சம் பெற்று சேர்த்த பணம் பொதுவெளியில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. அப்படி பட்ட நிகழ்வுகள் நடந்தால், இப்படிபட்ட வன்முறைகள் எந்த ஒரு இடத்திலும் தொடங்க முடியும். எங்கோ தூரத்தில் நடைபெற்றதாக நினைக்க வேண்டாம். வங்கதேசம், இலங்கை நாடுகளில் நடைபெற்றது. தற்போது நேபாளத்தில் நடைபெறுகிறது. நமது நாட்டின் அரசியல் ஆளுமைகள் அனைவரும் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.  என்ன சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். நேபாளம் திரும்பவும் அமைதி பெற வேண்டும் என்று நாம் வாழ்த்துவோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ