காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று (அக்டோபர் 2) உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா சாப்டர் 1. ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான ‘காந்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிதான் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். ஏனென்றால் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று அதிக வசூலை வாரிக் குவித்தது. அதைத்தொடர்ந்து வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படத்தின் மேக்கிங், விஎப்எக்ஸ், கிளைமேக்ஸ், ரிஷப் ஷெட்டியின் நடிப்பு ஆகியவற்றை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி வெளியான முதல் நாளில் இப்படம் உலக அளவில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் கசிந்துள்ளது. எனவே பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்னும் சில நாட்களிலேயே ரூ. 1000 கோடி வசூலை அள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், ஜெயராம் ஆகியோர் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அஜீனிஸ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.